
குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது….
கடந்த சில ஆண்டுகளாக உலகமே அசாதாரண சூழலை எதிர்கொண்டு வருகிறது.முதலில் கொரோனா பெருந்தொற்று,அதன்பின்னர் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சவால்,இப்போது மேற்காசியப் போர் பதற்றத்தால் உலகநாடுகள் சவாலை எதிர்கொண்டுள்ளன.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நெருக்கடியை கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியது.இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய நெருக்கடியாக மேற்காசியப் போர் நிலவிவருகிறது.நாம் எல்லோரும் இணைந்து எப்படி கொரோனா சவாலைக் கடந்து வந்தோமோ,அதுபோல இந்தச் சவாலையும் நிச்சயம் நாம் கடந்து வருவோம்.இதன் பாதிப்பு மக்களுக்கு ஏற்படாத வகையிலான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது.
இதற்கு முன்பு நமது நாட்டில் போர் அல்லது இன்னும் பிற சவாலான சூழலை எதிர்கொள்ளும் போது அரசின் வேண்டுகோளை ஏற்று தேசத்தின் குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்களது பொறுப்பை அறிந்து செயல்பட்டுள்ளனர். இன்று அதே சூழல் எழுந்துள்ளது.இதை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டி உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய பல இலட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிடுகிறது.அதேசமயத்தில் இறக்குமதிப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.அதோடு உலகஅளவில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கவனிக்கவேண்டும்.இந்தச்சூழலில் வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களின் பயன்பாட்டை நாம் குறைக்கவேண்டும்.நமது அன்றாட வாழ்க்கையில் இந்தப் பொருட்களை நாம் சார்ந்து இருப்பதைத் தவிர்க்கவேண்டும்.மேலும்,அந்நிய செலவாணியில் தொடர்புடைய தனி செயல்பாட்டைத் தவிர்க்கவேண்டும்.
பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை நாட்டுமக்கள் குறைத்துக் கொள்ளவேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். மெட்ரோ,பொதுப்போக்குவரத்து, மின்சார வாகனங்கள் போன்றவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் டிஜிட்டல் தொழில்நுட்பம் பல்வேறு விசயங்கள் எளிதானதாக மாற்றியுள்ளது.அந்தவகையில் அலுவலகம் சார்ந்த கூட்டத்தை ஆன்லைனில் விர்ச்சுவல் முறையில் நடத்தலாம்.வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறையை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பின்பற்றலாம்.தங்க இறக்குமதி சார்ந்து அதிகளவிலான தொகையை நம் தேசம் செலவிடுகிறது.அந்தவகையில் இயல்புநிலை திரும்பும்வரை தங்கம் வாங்குவதை மக்கள் தள்ளிப்போடலாம் என அவர் தெரிவித்தார்.
நாட்டின் நலன் கருதி பொதுமக்கள் 7 கோரிக்கைகளை பின்பற்ற முன்வருமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். அவை பின்வருமாறு:
1.வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான வாய்ப்புள்ள இடங்களில் அதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்.
2.ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவேண்டும்.
3.பெட்ரோல் / டீசல் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
4.சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
5.இரசாயன உரப் பயன்பாட்டை குறைத்துக்கொண்டு இயற்கை உரத்துக்கு மாறவேண்டும்.
6.வெளிநாட்டுத் தயாரிப்புகளைக் குறைவாகப் பயன்படுத்துங்கள்.
7.வெளிநாட்டுப் பயணங்களை ஓராண்டுக்குத் தவிருங்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


