
தமிழ்நாட்டில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை விஜய் அறிவித்தார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார், வேட்புமனு தாக்கலின்போது வேண்டும் என்றே தவறான தகவலைத் தெரிவித்தார். இதனால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. வேட்புமனு பரிசீலனையின்போது, கழிவறை சென்றுவிட்டு வருவதாகக் கூறிச் சென்றவர் தலைமறைவாகி விட்டார். இதனால் நடிகர் விஜய்யும்
தவெக தொண்டர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
வேட்பாளரைக் கடத்திச் சென்றுவிட்டதாக காவல்துறையிலும் புகார் செய்தனர். ஆனால் இன்றுவரை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார் எங்கே இருக்கிறார்? என்றே தெரியவில்லை.
அந்த வேட்பாளர் அயோத்தியாப்பட்டணம் பக்கமுள்ள வீராணத்தைச் சேர்ந்தவர் என்பதும் அதிமுகவில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளராகப் பணியாற்றி வந்தவர் என்பதும் தெரியவந்தது.ஏற்காடு தொகுதியைச் சேர்ந்த அவர்,எடப்பாடி தொகுதிக்குச் சென்றது எப்படி? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த அவரைத் திட்டமிட்டு தவெகவில் இணையவைத்து,வேட்பாளர் வாய்ப்பு வாங்கிக் கொடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போட்டியிடாத வகையில் விலைகொடுத்து வாங்கிவிட்டதாக தவெகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது எடப்பாடி தொகுதி விஜய் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குக் காரணமான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியைத் தோற்கடித்தே ஆகவேண்டும்,அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆகக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.தேர்தலில் நேருக்கு நேர் சந்திக்கத் திராணி இல்லாமல் பணம் கொடுத்து வேட்பாளரை வாங்கியதில் என்ன திறமை இருக்கிறது என்றும் விஜய் இரசிகர்கள் கொந்தளிப்புடன் கேட்டு வருகின்றனர்.
எடப்பாடி தொகுதியில், எடப்பாடி பழனிச்சாமிக்கு சரியான பாடத்தைக் கற்பிப்போம் எனவும் அவர்கள் சபதம் எடுத்துள்ளனர். சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என நினைத்து எங்களை தவெகவுக்கு ஓட்டுப்போடவிடாத காரணத்தினால், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக,சசிகலா கட்சிக்கு வாக்குகளைச் செலுத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
எங்கள் கட்சியைச் சந்திக்க முடியாமல் செய்தவருக்கு நாங்கள் கொடுக்கும் தண்டனை இதுவாகத்தான் இருக்கும் எனவும் அவர்கள் கூறிவருகிறார்கள். அத்துடன்,எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமிக்குத் தோல்வியைப் பரிசாக வழங்குவோம் எனவும் அவர்கள் கூறிவருகின்றனர்.
இதனால்,எடப்பாடி தொகுதியின் முடிவு எப்படி இருக்குமோ என்கிற பரபரப்பு நிலவுகிறது.


