தமிழ்நாட்டின் உட்கட்சி அரசியலுக்குள் ஈழத்தமிழர்கள் நுழையக்கூடாது – ஐங்கரநேசன் வேண்டுகோள்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு 13.01.2026 அன்று யாழ்ப்பாணம் நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்வுரையரங்கில் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிய அரசியல் அமைப்பு மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் தமிழ்நாட்டு அரசியற் தலைவர்களுடனான சந்திப்புப் பற்றி உரையாற்றியிருந்தார். யாழ் பல்கலைக்கழகத்தின் அரசறிவியற் துறையின் முதுநிலை விரிவுரையாளர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் வெனிசுலாவில் அமெரிக்க இராணுவத் தலையீடும் அதில் இருந்து அரசற்ற தேசிய இனங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும் பற்றி உரையாற்றியிருந்தார்.

மண்டபம் நிறைந்த அரசியல் ஆர்வலர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பா.காசிநாதன் வரவேற்புரையை ஆற்றியிருந்தார்.

இவ்வுரையரங்கில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி…..

தமிழ்நாட்டுத் தலைவர்களை நாம் பொதுவெளியில் விமர்சிப்பதன் மூலம் அவர்களின் கோடானுகோடித் தொண்டர்களை எங்களிடம் இருந்து நாமே அந்நியப்படுத்துகிறோம்
தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரபல்யமான திரைப்பட நடிகர்களுக்கும் இங்கே இரசிகர்கள் இருப்பதைப் போன்று, இப்போது தமிழ்நாடு அரசியல் தலைவர்களுக்கும் இரசிக மனப்பான்மையோடு இங்கே ஆதரவுத்தளம் உருவாகியிருக்கிறது.

இவர்கள் பொதுவெளியில் சகட்டு மேனிக்குத் தாங்கள் ஏற்றுக்கொள்ளாத தமிழ்நாட்டுத் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.இந்த விமர்சனங்கள் மூலம் ஒவ்வொரு தலைவர்களின் பின்னாலும் உள்ள அவர்களது கோடானுகோடித் தொண்டர்களை எங்களிடம் இருந்தும்,ஈழப்பிரச்சினையில் இருந்தும் நாமே அந்நியப்படுத்துகிறோம் என்ற கசப்பான உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது தமிழ்நாட்டை ஆட்சி செய்துகொண்டிருந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு யுத்தத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்ற அபிப்பிராயமும் ஆதங்கமும் ஈழத்தமிழ் மக்களிடையே உண்டு. ஈழத்தமிழர்களிடையே இன்றுவரை நீடிக்கும் உணர்வு நிலைப்பட்ட இந்த அபிப்பிராயத்தை எவரும் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அரசியல் அறிவார்ந்த ரீதியாக இதே அபிபப்பிராயத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் நாம் தமிழ்நாட்டுடனான உறவைப்பேண முடியாது என்பதே யதார்த்தம்.

ஈழத் தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டில் முத்துக்குமார் உட்பட எத்தனையோ பொதுமக்கள் தீக்குளித்து மரணித்திருக்கிறார்கள். ஆனால்,இன்று தமிழ்நாட்டு அரசியல் தவைர்கள் சிலர் ஈழப்பிரச்சினை தொடர்பாகப் பேசி வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் பொதுவாக ஈழத்தமிழர் அரசியல் பிரச்சினைகள் பற்றி அறிவதில் ஆர்வம் குன்றியவர்களாக இருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் எமது அரசியல் தலைவர்கள் தமிழ்நாட்டுடன் அரசியல் ரீதியான உறவைப் பேணாததே இதற்கான காரணம்.

எமது தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தில் எப்போதும் பின்தளமாகத் தமிழ்நாட்டு மக்களே இருந்து வந்துள்ளார்கள். ஆயுதப் போராட்டத்தில் பின்களப் பணியாளர்கள் அவர்கள்தாம். இந்தத் தொப்புள்கொடி உறவை நாமாகவே அறுத்துவிடக்கூடாது.அந்த ஏழுகோடித் தமிழ் மக்களின் ஆதரவுப் பலம் எங்களுக்கு எப்போதும் வேண்டும்.இதைப் புரிந்துகொண்டு தமிழ்நாட்டின் உட்கட்சி அரசியலுக்குள் நுழைந்து நாம் அரைவேக்காட்டுத்தனமாகக் கருத்துச் சொல்வதை முதலில் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response