பீகாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இருகட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (என்டிஏ), ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசு அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
என்டிஏ கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் தில்லியில் நேற்று பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.
முதல்கட்டமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் நடந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள், ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்கள் சஞ்சய் ஜா, லல்லன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், பாஜக தேசியத் தலைவர் நட்டாவின் வீட்டில் பாஜக உயர்நிலைத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இதன்பிறகு, பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா, தர்மேந்திர பிரதான், பீகார் துணை முதல்மைச்சர் சாம்ராட் சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் என்டிஏ கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி
செய்யப்பட்டது.
இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது….
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி என்டிஏ கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் சுமுக உடன்பாடு
எட்டப்பட்டுள்ளது. இதன்படி, பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) 101, லோக் ஜனசக்தி – ராம்விலாஸ் (எல்ஜேபி-ஆர்) 29 , ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) 6 , இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்) 6 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. கூட்டணியின் அனைத்துத் தலைவர்களும், தொண்டர்களும் தொகுதிப் பங்கீட்டை முழுமனதுடன் வரவேற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ஆளும்கூட்டணியில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.பீகாரில்,இன்னும் எதிர்க்கட்சிக் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், 2020 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதேகூட்டணியில் நிதீஷ்குமார் கட்சிக்கு 115 இடங்கள் பாஜகவுக்கு 110 இடங்கள் என்று பங்கீடு இருந்தது.அதாவது மாநிலக்கட்சியான நிதீஷ்குமார் கட்சியை விட ஐந்து தொகுதிகள் குறைவாகவே பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்தத் தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கும் சம அளவில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஒன்றியத்தை ஆளும் பாஜகவின் அழுத்தத்துக்குப் பணிந்து நிதீஷ்குமார் இதற்கு ஒப்புக்கொண்டார் இது கொஞ்சமும் சரியல்ல என்கிற விமர்சனங்களை அந்தக் கட்சிக்காரர்களே எழுப்பி வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.