நாம் தமிழருக்கும் திமுகவுக்கும்தான் போட்டி – சீமான் பேச்சு

சென்னையில் நேற்று பன்னாட்டு தமிழ் கிறித்தவப் பேராயம் மற்றும் சமூக நீதிப் பேரவை நடத்திய நிகழ்ச்சியில் சீமான் கலந்துகொண்டார்.

அங்கு அவர் பேசியதாவது…..

நான் புகழ்பெற்ற நடிகராக இருந்தால், அனைத்து ஊர்களிலும் இரசிகர்கள் இருப்பார்கள். அவர்களை தொண்டராக்கிக் கொண்டு, உடனடியாகக் கட்டமைப்பை உருவாக்கலாம். எந்தப் பின்புலம் இல்லாத நிலையில், அனைத்து வாக்குச்சாவடியிலும் வாக்கு பெறும் ஒரே கட்சி நாம் தமிழர்தான்.

தம்பி விஜய்யை நான் எதிர்க்கவில்லை. திமுக, காங்கிரசு, பாஜகவைத்தான் எதிர்க்கிறோம். தம்பி விஜய்யிடம் கேள்விகளை எழுப்பினோம், அதனையே எதிர்ப்பதாகச் சொல்கிறார்கள். இப்போது விஜய்யை விமர்சிப்பதால் என்னை திமுகவின் பி டீம் என சொல்கிறார்கள். திமுக எனக்குக் காசு கொடுக்கிறது எனச் சொல்கிறார்கள். நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன், யாருடைய சார்பும் எனக்குத் தேவையில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற திமுகவை விட பல்வேறு வாக்குச்சாவடிகளில் எங்களுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தன. இங்கு மிகப் பெரிய கட்சி நாம் தமிழர் தான். திமுக – தவெக இடையே போட்டி என சகோதரர் சொல்கிறார். விக்கிரவாண்டியிலும், ஈரோடு கிழக்கிலும் அவர்கள் போட்டியிடவில்லை. அங்கு உண்மையிலேயே நாம் தமிழருக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி இருந்தது.

இருவரும் திரைத்துறையில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால், நான் இரசிகர்களைச் சந்திக்கவில்லை, மக்களைச் சந்தித்தேன். என்னைப் பார்க்க வருபவர்கள் கொள்கை மணிகள். போட்டி என்பது கூட்டத்தை வைத்து கிடையாது. கருத்தியல் ரீதியாக இருக்கிறது.இப்போது நடப்பது திராவிடமா? தமிழ்த் தேசியமா? என்ற போட்டிதான்.

கூட்டணி வைப்பதாக இருந்தால் 15 ஆண்டுகளில் அவ்வளவு நெருக்கடி வந்தபோது வைத்திருக்க மாட்டேனா? எந்தக் காலத்திலும் திராவிடக் கட்சிகளுடனும், இந்தியக் கட்சிகளுடனும் நாம் தமிழர் கட்சி தேர்தல் உடன்பாடு வைக்காது என்பதை கட்சி தொடங்கியபோதே அறிவித்தேன். இப்போதும் தனித்து நிற்போம். 2029 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் தனித்து நிற்போம்.

காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இங்குள்ள பிறவி கோழைகள்தான் சீமானுக்கு வாக்களித்தால் பாஜக வந்துவிடும் என சொல்லி அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். நாம் பாஜகவின் பி டீம் என்றால் திமுக ஏ டீம். சிறுபான்மையினரின் பாதுகாப்பு திமுக என நம்பி, திமுகவை அவர்களே பாதுகாத்து வருகின்றனர்.

மக்கள் பிரச்சினைகளை பார்த்துப் படிப்பவர்கள் எப்படித் தலைவனாக இருக்க முடியும்?. பள்ளிக்கரணை ஏரி விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும் மனிதர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டனர். திருடர்கள் கூடியிருக்கும் இடம் திராவிடம். திருடர்கள் முன்னேற்றம், அனைத்திந்திய திருடர்கள் முன்னேற்றம் என பரிணாமம் பெற்று வருகிறது

இவ்வாறு சீமான் பேசினார்.

Leave a Response