நயினார் வானதி கேபிஇராமலிங்கம் பேச்சு – எடப்பாடி வேதனை

அடுத்தாண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன.ஆனால் மனமொத்த கூட்டணியாக அது இல்லை.ஏனெனில் தமிழ்நாட்டு மக்கள் கூட்டணி ஆட்சி என்று சொன்னால் ஓட்டுப்போடமாட்டார்கள் என்கிற கருத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எடுத்துச் சொல்லியும் கேட்காமல் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றே பாஜகவினர் பேசிவருகிறார்கள்.

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலையோ இன்னும் பலபடிகள் மேலே போய்,பாஜக ஆட்சி அமையும் என்று பேசுகிறார்.

இந்நிலையில் நேற்று ஒரேநாளில் வெவ்வேறு இடங்களில் பாஜக முன்னனியினர் கூறிய கருத்துகள் அனைத்தும் கூட்டணி அமைச்சரவை என்பதாகவே இருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது,

ஒரு தேசியக் கட்சியில், தேசியத் தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதைத்தான் எல்லோரும் சொல்ல வேண்டும். முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை 2026 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி என்று சொல்வது அவரது தனிப்பட்ட கருத்தே என்று சொல்லி உள்ளார். இதனை பூதாகரமாக்க வேண்டாம்.
நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்தபோது, கூட்டணியை அறிவித்தபோது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்கும். இதில் எவ்வித குழப்பமும், மாற்றுக் கருத்தும் இல்லை. கூட்டணி அரசு மற்றும் கூட்டணி அமைச்சரவை தொடர்பாக தேசியத் தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதுதான் தமிழ்நாட்டுக்கும். தமிழ்நாட்டுக்கு பாஜகவுக்கு தனி யூனிட் கிடையாது என்று கூறினார்.

சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியை, அவரது வீட்டில் நேற்று பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட தலைவருமான கே.பி.ராமலிங்கம் சந்தித்துப் பேசினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

பாஜகவுக்கு எத்தனை தொகுதி ஒதுக்கப்படும் என தேசிய தலைமையும்,எடப்பாடி பழனிச்சாமியும் தான் முடிவு செய்வார்கள். எந்தக் கட்சியுடன் கூட்டணி, வேட்பாளர்கள் யார்? யாருக்கு எவ்வளவு இடங்கள்? என்பது போன்ற அனைத்து முடிவுகளையும் எடப்பாடி பழனிச்சாமி தான் எடுப்பார். அவரது தலைமையில் புதிய ஆட்சி அமையும். அதற்கு பாஜக உதவியாக இருக்கும் என்றார்.

மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக திருவாரூரில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அதில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திர்ன் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் முதலமைச்சராவார் என்று கூறினார்.

இவர்கள் கருத்து, எடப்பாடி பழனிச்சாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் ஆனால் கூட்டணி ஆட்சிதான் என்பதை வலியுறுத்தும் விதமாகவே இருக்கிறது.இது அதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.அதிமுக ஆட்சி என்று சொல்லாமல் கூட்டணி ஆட்சி என்றே அனைவரும் சொல்லிவருகிறார்கள். இது தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்,மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள். அது புரியாமல் திரும்பத் திரும்ப பாஜகவினர் இப்படிப் பேசிவருகிறார்களே என்று வேதனைப்படுகிறார்கள்.

Leave a Response