
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் திடீரென டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அமித்ஷாவை சந்தித்த பின் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்கள் நலத் திட்டங்கள் குறித்து கோரிக்கை வைத்ததாகவும், அதிமுக பாஜக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறினார்.
ஆனால், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் நல்ல முடிவு வெளியாகும் என்று இரகசியத்தை போட்டு உடைத்தார்.
இந்த பரபரப்புக்கு இடையே அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு 3 நாட்களுக்கு முன் சென்றார். அப்போது அவரும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துப் பேசினார்.
செங்கோட்டையன் டெல்லி சென்றது அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கோ அல்லது கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கோ தெரியவில்லை. இரகசியமாகச் சென்று திரும்பினார்.
அமித்ஷாவின் சில கோரிக்கைகளை எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்துவிட்டார். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் மீண்டும் இணைந்து செயல்பட முடியாது எனக் கூறிவிட்டார். இதன் காரணமாகவே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனை டெல்லிக்கு அழைத்து அதிமுக-பாஜக கூட்டணிக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. கூட்டணிக்கு ஒத்து வரவில்லை என்றால், எடப்பாடியை கழற்றிவிட்டுவிட்டு அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவை உடைத்து கூட்டணியை ஏற்படுத்தவும் டெல்லி பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு நேற்று கூடியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் சட்டப்பேரவைக்கு வந்தனர். சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குச் செல்வதை செங்கோட்டையன் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். பேரவைத்தலைவர் அறைக்குச் சென்றுவிட்டு, 9.30 மணிக்கு அவை நடவடிக்கையில் கலந்து கொள்வார். ஆனால் நேற்று பேரவைத்தலைவர் அறைக்குச் செல்வதைத் தவிர்க்கும் வகையில் காலை 9.25 மணிக்கு பேரவைக்கு நேராக வந்தார்.
செங்கோட்டையன் டெல்லி சென்று வந்தது ஏன் என்பது குறித்து அறிய, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால் காலை 9.30 மணிக்கு பேரவைக்கு வந்த செங்கோட்டையன், யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார். எடப்பாடி பழனிச்சாமி பேரவைக்கு வந்தபோது, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால் செங்கோட்டையன் மட்டும் எழுந்து நிற்காமல் அவரது இருக்கையிலேயே அமர்ந்து இருந்தார்.
பின்னர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன், கோவிந்தசாமி, அம்மன்அர்ஜூனன் ஆகியோர் செங்கோட்டையன் இருக்கை அருகே வந்து டெல்லி பயணம் தொடர்பாக பேச்சு கொடுத்தனர். அவர்களிடம் செங்கோட்டையன் ஓரிரு வார்த்தை மட்டும் பேசிவிட்டு, புன்னகையை மட்டும் பதிலாகக் கூறி அமைதியாக இருந்தார்.
கடம்பூர் ராஜு, தளவாய் சுந்தரம் ஆகியோர் செங்கோட்டையன் அருகே இருபுறமும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தனபால் பேரவைக்கு வராததால், அந்த இருக்கையில் அமர்ந்து தளவாய் சுந்தரம் செங்கோட்டையனிடம் பேசிக் கொண்டிருந்தார். தனபால் இருக்கை அடுத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்து இருந்தார். திடீரென சத்தமாகப் பேசிய தளவாய்சுந்தரத்தை ஓ.பன்னீர்செல்வத்தைத் திரும்பிப் பார்த்தார். ஓபிஎஸ் திரும்பிப் பார்த்ததும் அமைதியான தளவாய்சுந்தரம், செங்கோட்டையனிடம் மெதுவாகப் பேசினார். இருவரையும் பார்த்த ஓ.பன்னீர்செல்வம், நீங்கள் பேசுங்கள் என சைகை காட்டிவிட்டு காதுகளை மூடிக்கொண்டார்.
இதனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.அவை நடவடிக்கைகளைக் காட்டிலும் செங்கோட்டையனைக் கவனிப்பதில் பலரும் கூடுதல் ஆர்வம் காட்டினர்.


