
பெங்களுருவில் உள்ள இராமேஸ்வரம் உணவகத்தில் மார்ச் 1 ஆம் தேதி திடீர் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று இந்துத்துவா அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய இணையமைச்சர் ஷோபா, இராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது தமிழர்கள் பெங்களுருவில் குண்டு வைக்கிறார்கள் என்கிற சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
மேலும் கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநில மக்களையும் இழிவுபடுத்தும் வகையிலும் அவர் பேசினார்.
தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,
பெங்களூரு இராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தியுள்ள ஒன்றிய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவின் பொறுப்பற்ற பேச்சுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசுவதற்கு அவர் ஒன்று, என்ஐஏ அதிகாரியாக இருக்கவேண்டும். அல்லது இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்வுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்க வேண்டும். கண்டிப்பாக இப்படிப் பேச அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. தமிழர்களோடு கன்னடர்களும் பாஜகவின் இந்த பிளவுவாதப் பேச்சை நிராகரிப்பார்கள்.
நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவித்ததற்காக ஷோபா மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறேன். பிரதமரில் இருந்து தொண்டர்கள் வரை பாஜகவில் இருக்கும் அனைவரும் இத்தகைய அசிங்கமான, பிரிவினை அரசியலை உடனே நிறுத்த வேண்டும்.தேர்தல் ஆணையம் ஷோபாவின் வெறுப்புப் பேச்சைக் கவனித்து அவர் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
கண்டனங்கள் வலுத்ததை அடுத்து ஒன்றிய பாஜக அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தமிழர்களிடம் மன்னிப்புக் கோரினார்.
இது குறித்து சமுக வலைதள பக்கத்தில் விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார்.அதில்,
தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு தமது கருத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனது கருத்துகள் பிறருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதை உணர முடிகிறது. குண்டுவெடிப்பு தொடர்பாக தெரிவித்த கருத்துகளுக்கு மன்னிப்பு கோருகிறேன். கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சி எடுத்தவர்கள் குறித்து மட்டுமே பேசினேன். இந்தப் பேச்சால், தமிழ்நாட்டில் யாரேனும் காயமடைந்திருந்தால் இதயத்தில் இருந்து மன்னிப்பு கேட்கிறேன். குண்டுவெடிப்பு தொடர்பான கருத்தை திரும்பப்பெறுகிறேன்
இவ்வாறு ஒன்றிய இணையமைச்சர் ஷோபா பதிவிட்டுள்ளார்.


