தமிழ்த் தேசியத்தில் ஆத்திகர் – நாத்திகர் அனைவர்க்கும் இடமுண்டு- பெ.மணியரசன் பேச்சு

 

“செந்தமிழ் வேள்விச் சதுரர்” மு.பெ. சத்தியவேல் முருகனார் அவர்கள் ஒருங்கிணைப்பில், சோமசுந்தரர் ஆகமத் தமிழ்ப் பண்பாட்டு ஆராய்ச்சி மன்றம், தமிழ் வழிபாட்டுப் பயிற்சி மையம், தெய்வத்தமிழ் அறக்கட்டளை ஆகிய அமைப்புகளின் சார்பில், 25ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் வெள்ளி விழா, 24 – 25.12.2015 இரு நாட்கள் சென்னை மாம்பலம் சந்திரசேகர் மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. 25.12.2015 அன்று பல தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன.

“திருமந்திரமும் அரசியலாரும்” என்ற தலைப்பில், சத்தியவேல் முருகனார் தலைமையில் நடந்த கருத்தரங்கில் தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்  பெ. மணியரசன் ஆகியோர் உரையாற்றினர்.

பெ. மணியரசன் உரை வருமாறு:

“திருமந்திரத்தில் திருமூலர் கொடுத்த ஒரு முழக்கம் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மாற்றத்திற்கு உதவியாய் இருந்தது. ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்பதே அம்முழக்கம்!

கடவுள் மறுப்பு இயக்கத்திலிருந்து பிரிந்து தனி இயக்கம் கண்ட அண்ணா அவர்கள், அனைத்து மக்களையும் இணைத்துச் சென்று, தேர்தலிலும் பங்கு கொள்ளும் இயக்கமாகப் புதிய அமைப்பை உருவாக்கியபோது, அவருக்குக் கைகொடுத்தது திருமூலரின் திருமந்திரம்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந் துய்மினே”

என்ற அந்தப் பாடலில் உள்ள முதல்வரி – அதிலும் “ம்மை” நீக்கிவிட்டு, ஒன்றே குலம் – ஒருவனே தேவன் என்று முழக்கம் கொடுத்தார் அண்ணா.

திருமந்திரத்தைப் படித்தால் – அதில் அனைவரையும் உள்ளடக்கிப் பொது நிலையில் கருத்துக் கூறும் திருமூலரின் பன்முகத் தன்மை நன்கு விளங்கும். “ஒருவனே தேவன்” என்பதில் சிவபெருமானை மனத்தில் வைத்துதான் திருமூலர் பேசுகிறார். ஆனால் பிற சமய நிந்தனை என்பதனை மையப்படுத்தி திருமூலர் கூறவில்லை.

யாராக இருந்தாலும் போலியாக வேடம் போடுபவர்களைத் திருமூலர் சாடுகிறார்.

”நூலுஞ் சிகையும் நுவலின் பிரமமோ
நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்த நுண்சிகை ஞானமாம்
நூலுடை யந்தணர் காணு நுவலிலே.”

என்றார். நூல் என்றால் பூணூல், சிகை என்றால் உச்சிக் குடுமி. இவை இரண்டும் வைத்துக் கொண்டால் உனக்குப் பிரம்மத் தன்மை வந்துவிட்டதாக ஆகுமா? நூல் என்பது என்ன? கார்ப்பாசம். அதாவது பஞ்சு, சிகை என்பது என்ன? தலைமுடி போன்ற முடி (மயிர்) தானே! அவற்றில் என்ன மகத்துவம் இருக்கிறது? பிரம்மத்தை அடைந்த பிராமணர்கள் என்று அவர்கள் போட்டுக் கொள்ளும் வெளிவேடத்தை வைத்து ஏற்க முடியாது என்றார் திருமூலர்.

ஆன்மிகப் போலித் தனங்களைத் திருமூலர் கண்டித்தார். இன்று அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் போலித் தனங்களைத் திருமூலர் சகிக்க மாட்டார். அரசியல் குறித்துத் தெளிவான பார்வையைத் திருமூலர் வைத்தார்.

தமிழர் மரபில் அரசியல் என்பது காவல் என்ற பொருளைக் கொண்டது. அரசு, அரண் என்ற சொற்கள் காவல் என்ற பொருள் கொண்டவை. திருமூலர் அரசனைக் காவலன் என்கிறார். பண்டைய இலக்கியங்கள் எல்லாம் அரசனை மக்கள் காவலன் என்கின்றன. கண்ணகியின் வாதத்தைக் கேட்ட பாண்டியன், “மண்பதை காக்கும் தென்புலங்காவல் என் முதற் பிழைத்தது” என்றான். ஆனால், இன்றைய அரசியலில் அரசியல் தலைவர்களுக்கு மக்கள் ஏவலர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள்.

அரசன் குற்றம் செய்யக்கூடாது. அரசன் செய்யும் குற்றம் மக்களைப் பாதிக்கும். எனவே, அரசியல் குற்றத்தை அறம் தண்டிக்கும் என்றார்கள். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!

அரசியல் அறத்தின்படி நடக்க வேண்டும். தமிழர்களைப் பொறுத்தவரை ஆன்மிகமாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் அது, அறம் என்ற அடித்தளத்தின் மீது தான் இயங்க வேண்டும். அறம் என்பது அழுக்காறு அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும் சேராமல் இன்ப துன்பங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் பண்பு என்றார் திருவள்ளுவப் பெருந்தகை!

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பர். மன்னன் என்பது இக்காலத்தில் அரசியல் என்று வைத்துக் கொள்ள வேண்டும். “இராச தோடம்” என்ற தலைப்பில் அரசன் என்னென்ன குற்றங்களைச் செய்யக்கூடாது என்று கூறுகிறார் திருமூலர்.

வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழியா நிற்பர்
பேர்ந்து இவ்வுலகைப் பிறர்கொள்ளத் தாங்கொள்ள
பாய்ந்த புலிஅன்ன பாவகத் தானே!

ஒரு வேந்தன் நற்பண்புகளுடன் நாட்டைக் காத்தால் மக்கள் அவன் வழியைப் பின்பற்றுவர். அடுத்து மிக முக்கியமான ஒரு கருத்தையும் சொல்கிறார். ஒரு நல்ல மன்னன் பிறநாட்டைப் போய் ஆக்கிரமிக்கக் கூடாது; பிறநாடு தன்னாட்டை ஆக்கிரமித்துக் கைப்பற்றவும் அனுமதிக்கக் கூடாது என்கிறார்.

ஐரோப்பாவில் 18 – 19ஆம் நூற்றாண்டுகளில் உருவான தேச இறையாண்மை (National Soverignity) கருத்தைத் திருமூலர் அந்தக் காலத்திலேயே சொல்லியுள்ளார். ஒருமொழி – இனத்தேசத்தில் அடுத்த தேசம் படையெடுக்கக் கூடாது. அந்த மொழி இனத் தேசத்தின் ஆட்சி பற்றி முடிவு செய்ய அந்தத் தேச மக்களுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்று 18-19ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் உருவான கொள்கையைப் பழங்காலத்திலேயே திருமூலர் பேசியிருக்கிறார். ஒரு வேந்தன் பிறதேசத்தை ஆக்கிரமிக்கக் கூடாது; அயல் வேந்தன் தன் தேசத்தை ஆக்கிரமிக்கும் அளவிற்குப் பலவீனமாகவம் இருக்கக் கூடாது.

திறம்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறியே ஆற்றல் வேண்டும்;
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன்று ஆமே!

ஒரு மன்னன் தவறுதலாக ஒரு செயலைச் செய்தால்கூட அதுவும் அறநெறி சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்கிறார். அவசரத்தில் தெரியாமல் செய்துவிட்ட தவறுகூட, அறஞ்சார்ந்து வருவதுபோல பழகிக் கொள்ள வேண்டும்.

இன்னொரு மிகமுக்கியமான கருத்தை இப்பாடலில் திருமூலர் கூறுகிறார். மக்கள் மன்னனுக்கு ஆறில் ஒரு பங்கு வரி கட்ட வேண்டும் என்பது அக்கால வழக்கம். விளைந்த தானியத்தில் ஆறில் ஒரு பங்கு அரசுக்குத் தர வேண்டும். அதேபோல் மக்கள் செய்யும் நன்மை – தீமையில் ஆறில் ஒரு பங்கும் மன்னனுக்குப் போய்ச் சேரும் என்றார்.

எனவே மன்னன், தான் அறநெறியோடு ஆட்சி செய்தால் மட்டும் போதாது, மக்கள் அறநெறி தவறாத வகையில் பாதுகாக்க வேண்டும். இல்லையேல், மக்கள் செய்யும் பழிபாவங்களில் ஆறில் ஒரு பங்கு மன்னனுக்கும் போய்ச் சேரும். திருமூலரின் இக்கருத்து புதுமையானது; சமூகத்தின் இயக்கத்திற்கு அரசைப் பொறுப்பாக்குவது; அரசியலைப் பொறுப்பாக்குவது! அறச்செயல்கள் மீது அவருக்கிருந்த வேட்கையை வெளிப்படுத்துகிறது. மன்னன் மட்டுமல்ல, மக்களும் குற்றச் செயல்களைச் செய்யாமல் வாழ வேண்டும் என்ற பொது நலக் கோட்பாடு அவருக்கிருந்தது.

கடவுளை ஒருவர் ஏற்கலாம்; மறுக்கலாம். அது அவரவர் உரிமை. ஆனால், ஓர் இனத்தில் தோன்றிய பழைய இலக்கியங்களை, தொன்மங்களைப் புறக்கணித்துவிட்டு, அவற்றில் நாம் பின்பற்றுவதற்குரிய கருத்துகள் இருப்பதைக் கவனிக்காமல், எடுத்துச் சொல்லாமல் அந்த இனத்தைப் பண்படுத்த முடியாது. அந்த இனத்திற்கு வீரத்தை – அறத்தை – நல்ல பண்பை – அறிவை ஊட்ட முடியாது. ஐரோப்பாவில் இதிகாசங்களைப் பழைய இலக்கியங்களைத் தொன்மங்கள் என்று போற்றுகிறார்கள்.

அமெரிக்காவில் இப்போது வாழும் மக்கள் 500 ஆண்டுகளுக்குள் அங்கு போனவர்கள். எனவே, அவர்களுக்குத் தொன்மங்கள் இல்லை. அதை ஒரு குறையாக அவர்கள் உணர்கிறார்கள். உளவியலை உருவாக்கிடத் தொன்மங்களை உதவுகின்றன என்கிறார்கள். அக்குறையைப் போக்கப் புதிய தொன்மங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதற்கு மேஜிக்கல் ரியலிசம் (மாய எதார்த்தவாதம்) எனறு பெயர் சூட்டியுள்ளார்கள் தென் அமெரிக்காவில்!

நம் முன்னோர்களின் வீரம் நமக்கு வீர உணர்ச்சியைத் தரும்; நம்முன்னோர்கள் கடைபிடித்த அறம் நமக்கு அற உணர்ச்சியை வளர்க்கும்; நம் முன்னோர்களின் அறிவாற்றல் நமக்கு அறிவைத் தேடும் வேட்கையை அதிகப்படுத்தும். பழைய மரபுகளிலிருந்து உயர் பண்புகளை கருத்துகளை ஏற்க வேண்டும். சரியில்லாதவற்றை விட்டுவிட வேண்டும்.

நம் மரபுப் பெருமையைச் சொல்லும்போது, நமக்கு உளவியல் உந்து சக்தி ஏற்படுகிறது. மதுரையில் கணவனை இழந்து, தனித்து அலறிய கண்ணகி, பாண்டிய மன்னனிடம் நீதி கேட்கும்போது தனது மரபுப் பெருமையைக் கூறித் துணிச்சல் பெற்றாள்.

“எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் பொறாது
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார்” – என் ஊர் என்றாள்.

“அவ்வூரில் ஏசாசச் சிறப்புடன் விளங்கிய இசைபெருங்குடியில் தோன்றிய மாசாத்துவன் மகன் கோவலன் – அக்கோவலனின் மனைவி நான், கண்ணகி” என்றாள்!

புறாவைக் காப்பாற்றத் தசையைக் கொடுத்த சோழ மன்னன் கண்ணகி காலத்தில் வாழ்ந்தானா? அந்நிகழ்வை அவள் பார்த்தாளா? பசுவின் கன்றைக் கொன்ற தன் மகனை அதே தேர்க்காலில் ஏற்றிக் கொன்ற மனுநீதிச் சோழன் செயலைக் கண்ணகி கண்டாளா? அது உண்மை நிகழ்வா? கற்பனைக் கதையா? அது அங்கு முக்கியமில்லை! அப்படிப்பட்ட உயிர்நேயம் மிக்க – நீதி நெறி தவறாத சோழ மன்னர்கள் ஆண்ட ஊர் என் ஊர் என்கிறாள். அக்கதை சொல்லும் அறம்; அக்கதை சொல்லும் நீதி! அவைதான் மக்களின் பண்பு வளர்ச்சிக்கு உளவியல் ஊக்கம் கொடுக்கும்.

கணவனை இழந்து கையறு நிலையில் மதுரை வீதிகளில் அலைந்த கண்ணகிக்கு போர்க்குணத்தைக் கொடுத்து, அரண்மனைக் கதவைத் தட்டச் செய்து, அரசனிடம் வாதிடத் துணிச்சல் கொடுத்தது அவளது மரபு அவளுக்களித்த உளவியல் ஊக்கம்!

நம்காலத் தமிழர்கள் தங்கள் முன்னோர் யாத்துத் தந்த பழைய இலக்கியங்களைப் படிக்க வேண்டும். புறநானூறாக இருந்தாலும், பெரிய புராணமாக இருந்தாலும் படிக்க வேண்டும். திருமந்திரத்தைப் படிக்க வேண்டும். கற்றுக் கொள்ளத் தேவையான கருத்துகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழர்களின் பண்டைய வாழ்க்கையைப் படிக்க வேண்டும்.

சிவநெறியாளர்கள் இங்கே கூடியுள்ளீர்கள். ஆன்மிகத்தில் இருபிரிவு இருக்கிறது. ஒன்று, பக்தி குறித்தது; இன்னொன்று சமூகவியல் குறித்தது. தமிழர் ஆன்மிகத்தைக் காக்க சிவ நெறியாளர்கள் வீதிக்குவர வேண்டிய நேரமிது. இந்துத்துவா என்று பெயர் சொல்லிக் கொண்டு தமிழரின் சிவநெறி – திருமால்நெறி அனைத்தையும் மறைத்து – மறுத்து – ஆரிய இந்துத்துவாவைத் திணிக்கிறார்கள்! ஆட்சி பலத்தோடு இப்போது தீவிரமாக ஆரியம் செயல்படுகிறது. “நானும் இந்து நீயும் இந்து” என தந்திரமாகச் சொல்லி – நம்மை இழுத்துக் கொண்டு நமது இன – மொழி – ஆன்மிக அடையாளங்களை அழிப்பதுதான் அவர்களின் திட்டம்!

தீயாடியப்பரை ‘அக்னீசுவரர்’ ஆக்கினார்கள்; அறம் வளர்த்த நாயகியை, ‘தர்மசம்வர்த்தினி’ என்று மாற்றினார்கள்; தஞ்சைப் பெருவுடையாரைப் ‘பிரகதீசுவரர்’ ஆக்கினார்கள்; கருகாத்த நாயகியை ‘கர்ப்பரட்சாம்பிகா’ என்று மாற்றினார்கள்.

பெயரைத்தானே மாற்றினார்கள். பெயரில் என்ன இருக்கிறது என்று கருதாதீர்கள். பெயர் நம் அடையாளம். தமிழ்ப் பெயரை மாற்றி சமற்கிருதப் பெயரை ஏற்றினார்கள். பின்னர் தமிழ் மொழியை வழிபாட்டிலிருந்து வெளியேற்றினார்கள். அதன்பிறகு அர்ச்சகர் பொறுப்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றினார்கள். இன்றுவரை அந்த அநீதி நீடிக்கிறது.

திருமூலரோ, பேர்கொண்ட பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக இருந்தால் நாட்டுக்கு ஆபத்து என்று அன்றே எச்சரித்தார்.

”பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லாத வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆமென்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே” என்றார்.

ஆன்மிகமும் அரசியலும் ஒன்று என்று கூறிக் கொள்ளும் வடநாட்டு இந்துத்துவாவாதிகள் – ஈழத்தில் நல்லூர் கந்தசாமி கோயிலைச் சிங்களர்கள் தாக்கி இடித்த போது வீதிக்கு வந்து போராடவில்லை. அதைக் கண்டித்துத் தமிழர்கள்தாம் போராடினோம். ஆத்திகத் தமிழர்கள் – நாத்திகத் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழர் என்ற இன அடிப்படையில் வீதிக்கு வந்து போரடினோம். அந்த இணைப்பு வேண்டும்.

சிவநெறியில் துறை போன அறிஞர் போன்றவர் மறைமலை அடிகளார். வள்ளலாருக்குப் பின் தமிழர் மறுமலர்ச்சியின் சின்னம் அவர். அவர் தலைமைதாங்கி, பொது நிலைக் கழக மாநாட்டைப் பல்லாவரத்தில் 1931 பிப்ரவரி 2,3,4,5 நாட்களில் நடத்தினார். அம்மாநாட்டுத் தீர்மானங்கள் மிகவும் முற்போக்கானவை. அவற்றில் சிலவற்றைப் பாருங்கள்:

• கடவுள் வழிபாட்டின்போது, கடவுள் வழிபாடு ஆற்றும் ஒருவர் தவிர ஏனையோர் எல்லோர்க்கும் கடவுளை வணங்கும் முறையில் எந்தவொரு வேற்றுமையும் கூடாது. திருநீறு வழங்கும் முறையிலும் உயர்வு தாழ்வு கூடாது. மக்கள் நிற்கும் வரிசைப்படி வழங்க வேண்டும்.

• பழந்தமிழ்க் குடிமக்கள் (அதாவது சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் – பெ.ம.) எல்லாரையும் உயர்வு தாழ்வு பாராது, தூய்மையாகத் திருக்கோயிலில் சென்று வழிபட எந்த இடையூறும் செய்யக் கூடாது.

• கோயில்களில் பொது மாதர்க்குப் பொட்டுக் கட்டும் வழக்கம் தொலைய வேண்டும். இனி அப்பழக்கம் கூடாது.

• சிறுவர்களுக்குத் திருமணம் செய்வதைத் தடை செய்யும் சாரதாச் சட்டம் உடனடியாக வழக்கத்திற்கு வர வேண்டும்.

• பெண்களுக்கு ஆடவரைப் போல் தாயபாகம் (சொத்துரிமை – பெ.ம.) வழங்க வேண்டும்.

• கைம்பெண் (விதவை) மறுமணம் செய்வது முதல் நூல் முடிவுக்கு ஒத்ததே. அறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்து வராதவை முதல் நூல் முடிவாக இருந்தாலும், அதை இப்போது ஒப்புக் கொள்ள முடியாது.

• சாதிக் கலப்பு மணம் மிகவும் ஏற்றதென இக்கழகம் முடிவு செய்கிறது.

மறைமலை அடிகளார் காட்டிய வழியில் ஆன்மிகத் தமிழர்கள் சமூகவியல் நடவடிக்கைகளிலும் பங்கேற்க வேண்டும். நாங்கள் முன்வைக்கும் தமிழ்த் தேசியத்தில் ஆத்திகர் – நாத்திகர் அனைவர்க்கும் இடமுண்டு. அவர்கள் எல்லாம் சேர்ந்ததுதான் தமிழினம்; தமிழ்த்தேசியம்! இந்தித் திணிக்கப்பட்ட போது 1938–இல் அதை எதிர்க்க மறைமலை அடிகளாரும் பெரியாரும் கைகோத்துக் களம் கண்டார்கள்.

தமிழ்மொழி காக்க, தமிழ் இனம் காக்க, தமிழர் ஆன்மிகம் காக்க நாம் கைகோத்துக் களம் காண்போம்!“.

இவ்வாறு பெ. மணியரசன் பேசினார்.

 

Leave a Response