இந்தி படித்தால் என்ன தவறு என்று கேட்பவரா? இதைப் படியுங்கள் தெளிவு பெறுவீர்கள்

மொழியுரிமையை பற்றி இன்று எனது சில நண்பர்களுக்கு புரியவைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது, சொல்லிவைத்தது போல் அனைவரும் இந்தி படித்தால் என்ன தவறு? அரசியலுக்காகதான் இதெல்லாம் என்பது அவர்கள் வாதம்.

இந்தி மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் படிப்பது தவறில்லை, நமக்கு விருப்பமிருந்தால். ஆனால் இதை படித்தால் தான் உனக்கு மத்திய அரசு வேலை என்று கட்டாயப்படுத்துவதில் தான் பிரச்சனை.

எனக்கு ஒன்றும் பெரிய மொழிப்பற்று மற்றும் மொழி வெறியெல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் நம் மொழிதான் மூத்த மொழி, சிறந்த
மொழி என்று சொல்லுமளவிற்கு பல மொழிகள் பற்றிய அறிவும் கிடையாது.

மொழியுரிமையை பற்றிய எனது தீவிர நிலைப்பாட்டிற்கு காரணம் எனது அனுபவம்தான்.

பள்ளி, கல்லூரி படிக்கும்போது நம்மில் பலர் போல, நானும் தீவிர நாட்டுப்பற்றுடன் இருந்தவன்தான். கார்கில் போர் முடிந்த சமயம்வேறு. இராணுவ அதிகாரியாக வேண்டும் என்பது அப்போதைய லட்சியம். பொறியியல் நான்காமாண்டு படிக்கும்போது எங்கள் கல்லூரி முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலில் Aarmy Short Service Commission தேர்வுக்கு சென்றோம்.

காரைக்காலில் நடந்த முதல்நிலை தேர்வில் வெற்றிபெற்று இரண்டாம் கட்ட தேர்விற்கு போபால் சென்றோம்.
அங்கு group discussionல் தேர்வு பெற்றால்தான் அடுத்த நிலைக்கு செல்லமுடியும். ஆங்கிலம் அல்லது இந்தியில் பேசலாம். அப்பொழுது எனக்கு ஆங்கிலத்தில் சில வாக்கியங்கள் பேசுவதே சிரமம். தமிழகத்தில் இருந்து சென்ற பெரும்பாலான மாணவர்கள் முதற்கட்ட நிலையிலேயே வெளியேற்றப்பட்டோம். ஆனால் எங்களைவிட ஆங்கில அறிவு குறைந்த, ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் கூட பேசமுடியாத, இந்தியை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள்
இந்தியில் பேசி அடுத்த கட்டத்திற்கு முன்னேறினர்.என்னையெல்லாம் தமிழில் பேசவிட்டிருந்தால் சில மணி நேரங்கள் தொடர்ச்சியாக பேசியிருந்திருப்பேன்.

இது இந்தியை தாய்மொழியாக கொண்டிராத 60% இந்தியர்களுக்கு செய்யப்படும் அநீதி. அந்த தேர்வு முறை எங்களுக்கு சமவாய்ப்பினை வழங்கவில்லை. ஒருவேளை தமிழர்கள்
கையில் அதிகாரம் இருந்து வட இந்தியர்களிடம் நீங்கள் தமிழ் கற்று தமிழில் பேசினால்தான் வேலை என்று சொன்னால்தான் அவர்களுக்கு மொழியுரிமையை பற்றிய அவசியம் புரியும். இராணுவத்தில் சேர்ந்த பிறகு இந்தி தகவல் தொடர்பு மொழியாக இருப்பதில் எந்த ஆட்சேபனையுமில்லை. ஆனால் தேர்வு முறையில் அனைத்து மாநில மக்களுக்கும் சம் வாய்ப்புகளை வழங்க வேண்டும். இது ஒரு உதாரணம்தான். இரயில்வே, மற்றும் மற்ற மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் இதுபோன்ற பாரபட்சங்களினால் நமது வேலைவாய்ப்பு பறிக்கபடுகிறது. இது வாழ்வாதாரத்திற்கான போராட்டம். மொழிப்பற்றினால் எங்கள் மொழிதான் சிறந்த மொழி என்று சொல்லும் அரசியல் அல்ல.

கலைஞர் செய்த தவறுகளால் மொழிபோராட்டத்தை கிண்டல் செய்பவர்கள் இங்கு அதிகம். மொழிப்போராட்டம் ஒன்றும் கலைஞர் ஆரம்பித்து இல்லை. அவரை விமர்சிப்பதற்கு 1000 ஞாயமான காரணங்கள் இருக்கும்போது மொழிப்போராட்டத்தை வைத்து அவரை விமர்சிப்பதை விட முட்டாள்தனம் வேறொன்றும் இல்லை.

சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ அவர்கள் ஆங்கிலத்தை அலுவல் மொழியாகவும், கல்வியில் பயிற்று மொழியாகவும் தேர்ந்தெடுத்த பொழுது பலர் அவரிடம் கேட்ட கேள்வி, 80 % சீன மொழி பேசுபவர்கள் வாழும் நாட்டில் மற்றவர்கள் ஆங்கிலத்தில் படிப்பதற்கு பதிலாக சீன மொழியில் படித்தால் என்ன தவறு என்று கேட்ட பொழுது, அது தமிழர்களுக்கும், மலாய் மக்களுக்கும் சம வாய்ப்பினை அளிக்காது. ஆங்கிலத்தில் படிப்பது இவர்கள் அனைவருக்கும் சம அளவில் கடினமாக இருக்கும் என்பது அவரது பதில். எந்த நிலையிலும் அனைத்து குடிமக்களுக்கும் சம வாய்ப்பினை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இந்தியாவில் எந்த வட இந்திய அரசியல் தலைவர்களும் மொழியுரிமையில் அடிப்படை நேர்மையுடன்/புரிதலுடன் இருந்ததில்லை(நேரு உட்பட).

அவர்களை விடுங்கள், பாதிக்கபட்ட தமிழர்களில் எத்தனை பேருக்கு இதன் அவசியம் புரிந்திருக்கிறது? இந்தியை படிக்க விடாமல் நம் அரசியல்வாதிகள்
தடுத்துவிட்டார்கள் என்பதே அரசியல் ஆர்வமற்ற பலரது எண்ணம். ஆனால் இவர்களிடம் பேசினால் புரியவைத்துவிட முடியும்.

மொழியுரிமைப் போராட்டத்தை கேலி செய்யும் குரூர மனம் படைத்தவர்களும் இருக்கிறார்கள். ஊழல் அரசியல்வாதிகளைவிட இவர்கள் இந்த சமூகத்திற்கு கேடுவிளைவிக்க கூடியவர்கள்.

மொழியுரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.– கார்த்திக் ராமசாமி

Leave a Response