
ஐ.பி.எல் 12 மட்டைப்பந்தாட்டத் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் ஏப்ரல் 2 இரவு அரங்கேறிய 14 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது.
‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணித்தலைவர் ரஹானே முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணிக்கு அணித்தலைவர் விராட் கோலியும், விக்கெட் கீப்பர் பார்த்தீப் பட்டேலும் நல்ல தொடக்கம் அமைத்துத் தந்தனர். சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் வந்ததும் பெங்களூரு அணி தடுமாறியது.
முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த நிலையில், விராட் கோலி (23 ரன், 25 பந்து, 3 பவுண்டரி) கோபால் வீசிய கூக்ளி வகை பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த டிவில்லியர்ஸ் (13 ரன்), ஹெட்மயர் (1 ரன்) ஆகியோரும் கோபாலின் சுழல் வலையில் சிக்கினர். ‘இளம் புயல்’ ஹெட்மயர் இதுவரை ஆடிய 4 ஆட்டங்களிலும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டாத பரிதாபம் தொடருகிறது.
இதன் பின்னர் பார்த்தீவ் பட்டேலும், மார்கஸ் ஸ்டோனிசும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆனால் ஸ்கோர் வேகம் மந்தமானது. பார்த்தீவ் பட்டேல் தனது பங்குக்கு 67 ரன்கள் (41 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். அவருக்கு பிறகு வந்த மொயீன் அலி, அணி 150 ரன்களை கடக்க உதவினார். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரில் ஸ்டோனிஸ்-மொயீன் அலி இணைந்து 17 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தனர்.
20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. ஸ்டோனிஸ் 31 ரன்களுடனும் (28 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), மொயீன் அலி 18 ரன்னுடனும் (9 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 12 ரன்கள் மட்டுமே வழங்கி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் 159 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அணித்தலைவர் ரஹானேவும், ஜோஸ் பட்லரும் களம் புகுந்தனர். ரஹானே 1 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற விராட்கோலி கோட்டை விட்டார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட ரஹானே, அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைய வித்திட்டார்.
அணியின் ஸ்கோர் 60 ரன்களாக (7.4 ஓவர்) உயர்ந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. ரஹானே 22 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மறுமுனையில் அரைசதம் அடித்த ஜோஸ் பட்லர் 59 ரன்களில் (43 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். தொடர்ந்து இறங்கிய ஸ்டீவன் சுமித்தும் (38 ரன்) கணிசமான பங்களிப்பை அளித்து நெருக்கடியை தணித்தார்.
ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திரிபாதி 34 ரன்களுடனும் (23 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
4 ஆவது ஆட்டத்தில் ஆடிய ராஜஸ்தான் அணிக்கு இது முதல் வெற்றியாகும். இன்னும் வெற்றிக்கணக்கைத் தொடங்காத பெங்களூரு அணிக்கு இது 4 ஆவது தோல்வியாகும்.
பெங்களூரு அணியின் விராட் கோலிக்கு,அணித்தலைவராக இது 100 ஆவது ஆட்டமாகும். இந்த மைல்கல்லை எட்டிய 3 ஆவது அணித்தலைவர் ஆவார். ஐ.பி.எல்.போட்டிகளில் அதிக ஆட்டங்களுக்கு அணித்தலைவராக இருந்தவர்களில் தோனி (162 ஆட்டம்), கவுதம் கம்பீர் (129 ஆட்டம்) முதல் 2 இடங்களில் உள்ளனர்.
