
தமிழ்நாடு கம்மநாயுடு எழுச்சி பேரவையின், கோவை மண்டல மாநாடு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில், மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார்.
அந்த மாநாட்டில் பேசிய மதிமுகவைச் சேர்ந்த தனமணி வெங்கட் என்ற பெண் உறுப்பினர், தெலுங்கு நாயக்கர்கள் தான் இந்த மண்ணின் மைந்தர்கள் எனவும், தமிழர்கள் லெமூரியா கண்டத்திலிருந்து வந்ததாகவும் தமிழர்கள் குறித்து இழிவாகப் பேசியிருந்தார்.
இதனால் தமிழ் உணர்வாளர்கள் அவருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துவந்தனர்.
அப்படிப் பேசியவர் மீது நடவடிக்கை எடுப்பாரா? என்கிற கேள்விகளும் எழுந்தன.
அவற்றிற்குப் பதிலளிக்கும் விதமாக இன்ரு மதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…..
ஒழுங்கு நடவடிக்கை மதிமுக
தலைமைக் கழக அறிவிப்பு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊடக விவாதக்குழு உறுப்பினரும், கழகப் பேச்சாளருமான கோவை திருமதி தனமணி வெங்கடபதி கழகத்தின் கண்ணியத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும், கொள்கைக் கோட்பாடுகளுக்கும் முரண்பட்டு செயல்பட்டதால் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அவர் வகித்து வரும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
அவரது கணவர் வெங்கடபதி அவர்களும், கோவை மாநகர் மாவட்ட இலக்கிய அணித் தலைவர் ஸ்ரீமான் சுந்தரம் அவர்களும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள்.’
வைகோ
பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
தாயகம்,
சென்னை – 8
01.02.2019
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


