மீத்தேன் எதிர்ப்பு இயக்கத்தலைவர் அநீதியாகக் கைது – களத்தில் இறங்கிய நாம்தமிழர்கட்சி

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் எடுக்கின்ற பணிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் செய்துவருகிறது.அந்த ஆய்வால் நிலத்தடி நீர் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே கதிராமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆழ்குழாய்க் கிணறுகளையும் அகற்றி ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி கதிராமங்கலம் மக்கள் கடந்த 20 மாதங்களாக பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அந்த இடத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பான ஆய்வுகளை திருவிடைமருதூர் துணைக்கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்போடு ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பொதுமக்களிடம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டு ஓஎன்ஜிசி குழாய் பராமரிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து ஓஎன்ஜிசியின் ஆய்வுப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என மீத்தேன் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன், ராஜூ இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி குடந்தை பொறுப்பாளர் வழக்கறிஞர் மோ.ஆனந்த் எழுதியுள்ள குறிப்பில்…..

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பாக இன்று காலை 8.30 மணியளவில் மீண்டும் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்கின்ற பணிகள் தொடங்குவதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்றன. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப் போன மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத் தலைவர் ஐயா பேராசிரியர் ஜெயராமன் அவர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்து திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் வைத்திருக்கிறது.ஒரு சாதாரண விளக்கம் கேட்கப் போன ஐயா அவர்களை அராஜகமாக கைது செய்து காவலில் வைத்து இருப்பதென்பது ஆகப்பெரும் ஜனநாயகப் படுகொலை. தமிழக அரசின் அநீதி நடவடிக்கை.

நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை சார்பாக மாநில இளைஞர் பாசறை செயலாளர் அண்ணன் வழக்கறிஞர் மணி செந்தில் அவர்களும், கும்பகோணம் செய்தி தொடர்பாளர் பரணிதரன், திருவிடைமருதூர் தொகுதி ஒன்றிய செயலாளர் தம்பி இரா.சா.ஆனந்த், அவர்களும்,நானும் , கைது செய்யப்பட்டு திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கிற ஐயா பேராசிரியர் ஜெயராமன் அவர்களை சந்திக்கச் சென்றிருந்தோம்.

எங்களிடம் ஐயா ஜெயராமன் அவர்களை ரிமாண்ட் செய்யப்போவதில்லை என்று சொல்லிய காவல்துறை அதிகாரிகள் நாங்கள் சந்தித்து விட்டு வெளியே வந்த பிறகு அதற்கான பணிகளை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

மீண்டும் காவிரி டெல்டா மாவட்டங்கள் ஒரு மாபெரும் போராட்டக் களமாக மாறுவதற்கான சூழலை அரசும் காவல்துறையும் வலிந்து ஏற்படுத்துகின்றன.

உடல் நலிவுற்ற நிலையில் இருக்கின்ற ஐயா பேராசிரியர் ஜெயராமன் அவர்களை அநீதியாகக் கைது செய்திருப்பது என்பது ஒட்டுமொத்த தமிழினத்திற்கு விடப்பட்டிருக்கின்ற பெரும் சவாலாகவே கருதுகிறேன்.

ஐயா அவர்களை மீட்கவும், நம் மண்ணை மலடாக்கக் கூடிய மீத்தேன் திட்டத்தை மண்ணிலிருந்து முக்கியமாக வெளியேற்றும் வரையிலும் நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக போராட்டக்களத்தில் நிற்கும் எனவும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழக்கறிஞர் மோ ஆனந்த்,
குடந்தை சட்டமன்ற தொகுதி செயலாளர், நாம் தமிழர் கட்சி.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள செய்தியில்….

கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் செய்யும் பெட்ரோல் கிணறு பராமரிப்பு பணிகள் குறித்து கேட்க வந்த மீத்தேன் எதிர்ப்பு இயக்கத் தலைவர் ஐயா பேராசிரியர் ஜெயராமன் அவர்களைக் கைது செய்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. மண்ணின் மக்களின் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் தமிழக அரசின் இப்போக்கு அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்!

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Leave a Response