
ஒருஊர்லரெண்டுராஜா வெற்றிப்படத்தைத் தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கும் புதியபடம் போடா ஆண்டவனே என்பக்கம். ரஜினிகாந்த் பேசிய இந்தவசனம் கடவுளை நம்புகிறவர்களுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்கிற வசனம். அதையே தன் படத்துக்கான பெயராக வைத்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

முதல்படத்திலிருந்தே கதைக்குத் தேவையான நடிகர்களைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தக்கூடிய கண்ணன், இந்தப்படத்திலும் அதைக் கடைபிடித்திருக்கிறார். வெண்ணிலாகபடிக்குழு விஷ்ணு கதாநாயகனாகவும் பிசாசு பிராயகா நாயகியாகவும் நடிக்கிறார்கள். அட, ஆண்டவன் பக்கத்தில் பிசாசு.

இன்றைய காலகட்டத்தில் படத்தைத் தொடங்கும்போதே அதை வெளியிடுகிற நேரத்தையும் அறிவிப்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. இயக்குநர் கண்ணனோ, இந்தப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் கடைசியில் தொடங்கும் செப்டம்பரில் படத்தை வெளியிடுகிறோம் என்று சொல்கிறார்.
ஆண்டவனே என்பக்கம் என்று சொல்வதால் இது பக்திப்படம் என்று நினைத்துவிடக்கூடாது. இது காதல், சண்டை ஆகிய அம்சங்களுடன் நகைச்சுவைக்கு முக்கியஇடம் கொடுக்கிற படமாகத் தயாராகவிருக்கிறதாம்.
விஜய்ராஜ்ஜோதி என்பவர் தயாரிக்கும் இந்தப்படத்தை, முந்தைய படத்தைப்போலவே முதல்பிரதி அடிப்படையில் கண்ணனே தயாரித்தும் தருகிறாராம். பொதுவாக இயக்குநரே தயாரிப்புப்பொறுப்பை ஏற்றால் செலவைக் குறைத்துப்படமெடுக்க நினைப்பது இயல்பு. இவருடைய தகவல் நேரெதிராக இருக்கிறது. சென்னையில் 45 நாட்கள் படப்பிடிப்பு அதைத் தொடர்ந்து கனடாவில் பத்துநாட்கள் படப்பிடிப்பு சென்னையின் ரிச்சிதெரு போன்றதொரு மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு என்று எல்லாமே பெரிதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
2008 இல் முதல்படத்தை வெளியிட்டது தொடங்கி இன்றுவரை தன்னுடைய பயணத்தைக் கண்ணியமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் கண்ணனுக்கு இந்தப்படம் பெரும்திருப்புமுனையாக அமையும் என்று சொல்கின்றனர்.


