
சென்னையில் இன்று (செப்டம்பர் 25-2017) செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி.தினகரன் கூறிய கருத்துகளின் சாரம்…
ஜெயலலிதா இறந்து சில நாட்களில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக சசிகலாவை பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடி ஒத்துக்கொள்ள வைத்தது யார்? இதே அமைச்சர்கள் அவர் காலில் விழுந்ததை நாடே பார்த்தது.திண்டுக்கல் சீனிவாசன் சசிகலாவைப் பொதுச் செயலாளர் மட்டுமல்ல முதல்வராகவும் வர வேண்டும் என்று கூட்டத்தில் பேசினார்.
அன்று இதே எடப்பாடி, ஓபிஎஸ் எதிர்க்கட்சித்தலைவருடன் சிரித்துப் பேசுகிறார் என்று தினமும் குறை சொன்னவர். ஓ.எஸ்.மணியன் எம்ஜிஆரையே எதிர்த்து எஸ்டி.சோமசுந்தரத்துடன் சென்ற விசுவாசமிக்க தொண்டர். இன்று அவர் சட்டதிட்டம் பற்றிப் பேசுகிறார்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜானகி ராமச்சந்திரன் முதல்வராக முடியவில்லை. ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா கைகாட்டிய ஓபிஎஸ் எந்த எதிர்ப்புமில்லாமல் முதல்வரானார். அந்த அளவுக்கு கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.
இன்று சசிகலாவை விமர்சிப்பபவர்கள் அன்று அவர் மூலம் அமைச்சர் பதவி பெற்றவர்களே, தம்பிதுரை நாடாளுமன்றத்துக்குக் கூடச் செல்லாமல் காலை 7-30 மணிக்கு போயஸ் கார்டனுக்கு வந்தால் நள்ளிரவு தான் வீட்டுக்கு போவார். ஜெயலலிதாவை மக்கள் முதல்வராக்கி அழகு பார்த்தார்கள், எடப்பாடி பழனிச்சாமிச்சாமியை அப்படி வைத்துப் பார்க்க விரும்புவார்களா? காலம் மாறும் அன்று இவர்கள் தேர்தலில் நிற்கும் போது மக்கள் தூக்கி எறிவார்கள்.
திமுக சார்பில் ஓபிஎஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு போடப்பட்டுள்ளது, நாங்களே அதற்கான முயற்சியில் தான் இருந்தோம், அதற்குள் தகுதி நீக்க பிரச்சனை வந்துவிட்டது. ஆனாலும் நாங்களும் வழக்கு தொடுப்போம். திமுகவினர் வழக்குப் போடக் காரணம் உரிமைக்குழுவில் அவர்கள் தரப்பு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பதால் தான்.
அனைத்து 23 ஆம் புலிகேசிகளும் ஒரு நாள் மக்களுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். 23 ஆம் புலிகேசி தவறான வார்த்தை அல்ல அவர் பெரிய மன்னர். இவர்கள் 32 ஆம் புலிகேசிகள். ஒரு பாடகர் பெயரைக்கூடச் சொல்லத்தெரியாத அளவுக்கு அமைச்சர்கள் உள்ளனர்.
இந்த அமைச்சர்கள், ஜெயலலிதாவால் தான் அமைச்சர்களாக்கப்பட்டார்கள். ஜெயலலிதா இருந்தவரை அவர்தான் அனைத்துத் துறைகளையும் பார்த்துக்கொண்டார். இவர்கள் வாய் பொத்தித்தான் நிற்பார்கள், அதன் பின்னர் தானே தனியாக செயல்படும்போது இவர்கள் யாரென்று தெரிகிறது.
18 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதியை, காலி என அறிவிக்ககூடாது என்று உயர்நீதிமன்றம் சொல்கிறது. நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்வீர்களா? இந்த அரசு சொல்வதை ஏற்றுக்கொள்வீர்களா? முன்னாள் அமைச்சர்கள் செந்தில், பாலாஜி பழனியப்பன் மீதே இவர்கள் நடவடிக்கை எடுக்கும் போது எம்.எல்.ஏக்கள் வெளியே வந்தால் விட்டு வைப்பார்களா.
தமிழக அரசின் இணையதளத்தில் 18 எம்.எல்.ஏக்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதற்கும் அவர்கள் பிரச்சனையை எதிர்கொள்வார்கள். நீதிமன்ற அவமதிப்பு கட்டாயம் வரும். அப்போது யாரையாவது அதிகாரிகளை பலிகடவாக்குவார்கள்.
தினகரனிடம் 75 நாட்கள் ஜெயலலிதா சிகிச்சையில் நடந்தது பற்றி தனக்கு தெரியாது என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளது பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:
இட்லி சாப்பிட்டது பற்றி அன்று இவரை யார் பேசச்சொன்னது?. அன்று நடந்தது பொய் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறுவதை வாதத்துக்கு வைத்துக்கொண்டால் இன்று அவர் பேசுவது உண்மையா என்ற கேள்வியையும் வைக்கலாமே. இன்று அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள ஏன் அவர் பொய் பேசக்கூடாது?
ஜெயலலிதாவை செப்.22 அனுமதித்தது முதல் அவரைப் பார்த்துக்கொண்டது தமிழக அரசின் மருத்துவக்குழுவும், அப்போலோ மருத்துவர்களும்தான், எனது சித்தி சசிகலாவைக் கூட அனுமதிக்கவில்லை. காரணம் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயம் தான். எப்போதாவது அழைத்தால் பார்க்க அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் வார்டுக்கு மாற்றிய பிறகு ஜெயலலிதாவுடன் தான் எங்கள் சித்தி சசிகலா இருந்தார். அப்போது ஜெயலலிதா சாதாரணமாக இருந்தார். நைட்டியுடன் அவர் டிவி பார்ப்பதை என் சித்தி வீடியோவாக எடுத்தார்.
அந்த வீடியோவை வெளியிட சித்தி அனுமதிக்கவில்லை. காரணம் ஜெயலலிதாவை போயஸ் கார்டனிலிருந்த நாங்கள் கூட நைட்டியில் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு அவர் தன்னைப்பற்றிய ஒரு பிம்பத்தை பராமரித்தார்.
அப்படிப்பட்டவரை நைட்டியில் எடுத்த வீடியோ காட்சிகளை வெளியிட சித்தி அனுமதிக்கவில்லை. எங்களைப்பற்றி குற்றம் சொன்னபோதும் நாங்கள் வெளியிடாததற்கு இதுவே காரணம்.
ஆனால் நீதி விசாரணையின் போது அந்த வீடியோவை சமர்ப்பிப்போம். மக்கள் முன்பு அல்ல விசாரணை ஆணையத்திடம் அளிப்போம். நீதி விசாரணைக்கு ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது பணியில் இருக்கும் மூத்த நீதிபதியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும். மடியில் கனமில்லை அதனால் எங்களுக்கும் வழியிலும் பயமில்லை.
இவ்வாறு தினகரன் பேசினார்.


