பிரமாண்டமாக எடுக்கப்பட்ட பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுமே ஐநூறு கோடிக்குள் முடிந்துவிட்டதே.. என்னதான் மோகன்லால் படம் என்றாலும் 1000 கோடி ரூபாய் பட்ஜெட் என்பது மலையாள திரையுலக வியாபார எல்லையை பொறுத்தவரை சாத்தியமே இல்லாத ஒன்று என்பது நமக்கே தெரியும்… ஆனால் மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுத்தில் உருவாகியுள்ள ‘ரெண்டாமூழம்’ (இரண்டாவது திருப்பம்) நாவல் மகாபாரதம் என்கிற பெயரில் மோகன்லாலை ஹீரோவாக வைத்து 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமான படமாக உருவாக இருக்கிறது. ஆறு மொழிகளில் தயாராகி சுமார் நூறு மொழிகளில் டபிங் செய்யப்பட இருக்கிறதாம்.
மகாபாரத கதையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல் பீமனின் கண்ணோட்டத்தில் கதையை விவரிப்பதாக எழுதப்பட்டிருந்தது இந்தக்கதையில் பீமனின் கதாபாத்திரத்தில் தான் மோகன்லால் நடிக்கிறார். ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த இந்திய தொழிலதிபர் ஒருவர்தான் இந்தப்படத்தை தயாரிக்கிறார். விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவஸ்தரான இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் இனி வரும் நாட்களில் அறிவிக்கப்படுமாம்.