சுபவீயை மிரட்டும் காவிகளே உங்கள் வாலைச் சுருட்டுங்கள்


தரமற்ற தாக்குதல்கள்
பேராசிரியர் சுபவீ.
——————————-
தமிழகத்தில் கடந்த 50 வருடங்களாக அரசியல் சீரழிந்து விட்டது, அரசியல் நாகரிகம் அற்றுப் போய்விட்டது என்று குற்றம் சாற்றுவது இப்போதெல்லாம் ஒரு பழக்கமாக ஆகிவிட்டது. ஐம்பது என்னும் ஆண்டுக்கணக்கில் ஓர் அரசியல் இருப்பதை நாம் அறிவோம்.அறிஞர் அண்ணா முதல்வராகப் பதவியேற்று 50 ஆண்டுகள் ஆகின்றன என்பதை வைத்தே இந்தக் கணக்கு சொல்லப்படுகின்றது. அதாவது திராவிடக் கட்சிகள்தான் சீரழிவிற்குக் காரணம் என்பது இதன் உட்பொருள். இதனைப் பல இடங்களில் பா.ஜ.க.வினர் முன்மொழிகின்றனர், போலித் தமிழ்த் தேசியர்கள் வழிமொழிகின்றனர்.

‘வடநாட்டில் எல்லாம் அப்படியில்லை’ என்று வேறு இடையிடையே சொல்லிக் கொள்கின்றனர். அங்குதான், மம்தா பேனர்ஜி தலைக்கு விலை வைக்கிறார் ஒருவர்.பாரத மாதாக்கி ஜே என்று சொல்லவில்லையானால் தலையை வெட்டி விடுவேன் என்கிறார் ஒரு பா.ஜ க சட்டமன்ற உறுப்பினர்.நாகரிகமான அரசியலின் அடையாளங்கள் இவ்வரிகள்.

தமிழ்நாட்டில் இவர்கள் காலூன்றினால் மிகக் கொடுமையான, வன்முறை நிறைந்த அரசியல்தான் வளரும். அண்மைக்காலமாக டுவிட்டரில் எனக்கு வருகின்ற மிரட்டல்கள், நாகரிகமற்ற வசை மொழிகள் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஏதோ ஒரு பெயரில் அனுப்புகின்றனர். எனினும் அவர்களின் மின் அஞ்சல் முகவரிகள் உள்ளன. காவல்துறை நினைத்தால் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள் மீது அப்படியெல்லாம் ஏதும் செய்துவிட மாட்டார்கள் என்பதால், அவர்களிடம் போவதை விட,மக்களிடம் செல்வதே பயனுள்ளது என்று கருதுகின்றேன்.

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளன்று, “இந்துவாகப் பிறந்தேன், இந்துவாகச் சாக மாட்டேன் என்ற தன் உறுதியை நிறைவேற்றிய சமூக நீதிப் போராளி அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று நான் ஒரு பதிவை விட்டிருந்தேன். அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களில் சிலவற்றை அவர்களின் பெயர்களோடு கீழே தருகின்றேன்.

1. ஹரிஹரன் முத்து – யோக்கியனாய்ப் பிறந்தேன், அயோக்கியனாய்த்தான் சாவேன். இப்படிக்கு திராவிடக் குஞ்சுகள்

2.ரமேஷ் பழனிச்சாமி – சமூக நீதி காத்த வெங்காயங்களே, நீங்க சோறுதான் திங்கிறீங்க கிறது உண்மைதானா?

3. சோழன் – சொரியாரிஷ்டா பொறந்தவனே, இந்துவாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டுருக்கான். இதுக்கு நாலு பேரோடத வாங்கி மடக்கு மடக்குன்னு…..(இதற்கு கீழே அய்யா ஆசிரியரின் படம்)

4.அருண் – டேய் பொட்ட, change your name to suba.pee

5. முத்தையா பாலன் – அவர் சொன்னது வேற ஏதும் ஞாபகம் வல்லையா எச்சக்கட நாயே…

மேலே உள்ளவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. ஒவ்வொரு முறை நான் பதிவிடும்போதும் இது போன்ற வசைமொழிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இவற்றைத் தாண்டி அம்பேத்கர் பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு எதிர்வினையாக, , இளம்பரிதி என்னும் ஒருவர், “உன்னுடைய சாவுக்காக காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அவருடைய பெயருக்கு அருகில் அவருடைய படத்திற்குப் பதிலாக ஒரு காவிக்கொடி பறக்கிறது.

இவர்களின் வசைமொழிகளைக் கண்டு அச்சப்பட்டு இவற்றை இங்கு நான் வெளியிடவில்லை. திராவிடக் கட்சிகள்தான் அரசியல் நாகரிகத்தைக் கெடுத்துவிட்டன என்று குற்றம் சாற்றுவோரின் ‘நாகரிகம்’ என்ன என்பதை எடுத்துக் காட்டவே இப்பதிவு! அரசியலற்ற அநாகரிக,வன்முறை நிறைந்த இந்த நிலை, பா.ஜ.க வின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தது என்பதை விளக்கவும் இப்பதிவு பயன்படும்.

என் சாவுக்குக் காத்திருக்கும் நண்பருக்கு ஒரு செய்தி – எனக்குச் சாவு வரும்போது உங்களுக்கு என் நண்பர்கள் கண்டிப்பாகச் செய்தி அனுப்புவார்கள். உங்களுக்கு எப்போதேனும் வாழ்வு வந்தால் எங்களுக்குச் சொல்லி அனுப்புங்கள். -சுபவீ

வடநாட்டைப் போல தமிழகத்திலும் ஆட்டம் போட நினைக்கிறார்கள் காவிகள். தமிழகம் அதற்கான இடமில்ல, எனவே உங்கள் வாலைச் சுருட்டிக் கொள்ளுங்கள் காவிகளே.

Leave a Response