படி,படி, மார்க் எடு என்று மட்டுமே சொல்லாதீர்கள் – இந்தியாவின் ஏழை முதல்வர் வேண்டுகோள்

மாணிக் சர்க்கார், 1980 இல் 31 வயதில், திரிபுராவின் அகர்தலா சட்டமன்றத் தேர்தலில் வென்றதன் மூலம், அவருடைய அரசியல் வாழ்க்கை தொடங்கியது. 1983 தேர்தலிலும் அவர் வென்றார். 1998 முதல் கடந்த 15 வருடங்களாக திரிபுராவின் முதல்வராக இருக்கும் மாணிக் சர்க்கார், நீண்ட காலமாக முதலமைச்சராக இருந்து வரும் இந்திய மாநில முதல்வர்களுள் குறிப்பிடத்தக்கவர். சிபிஎம் கட்சியின் உயர்மட்ட அரசியல் மற்றும் கொள்கை வகுக்கும் குழுவான பொலிட்பீரோவின் உறுப்பினர்.

இந்திய_மாணவர்_சங்கம் தலைவராக பங்காற்றியுள்ளார். திரிபுராவில் சமசிந்தனை உள்ள நட்புக் கட்சிகளுடன் இடது முன்னணிக் கூட்டணி ஆட்சிக்கு தலைமை வகிக்கிறார்.

06 மார்ச்சு 2013 அன்று ஆறாவது இடது முன்னணி ஆட்சிக்கு தலைமையேற்று முதல்வராக பொறுப்பேற்றார். இந்திய முதல்வர்களிலேயே மிகவும் ஏழையான முதல்வர் என்பது‍ இவரது‍ மற்றொரு‍ சிறப்பம்சம். 59 வயதான மாணிக் சர்க்காருக்கு‍ முதல்வர் என்ற முறையில் மாத ஊதியமாக 9,200 ரூபாயும் அலவன்சாக 1,200 ரூபாயும் கிடைக்கிறது. அதை அப்படியே கட்சி்க்குத் தந்து‍விடுகிறார். கட்சி தரும் 5,000 ரூபாயில் வாழ்க்கையை நடத்துகிறார். இவருக்கென்று‍ சொந்தமாக வீடோ, நிலமோ கிடையாது. இவரது‍ மனைவி பஞ்சலி பட்டாச்சார்ஜி மத்திய சமூக நலத்துறையில் பணியாற்றுகிறார்.

இத்தகைய சிறப்புகளுக்குரிய மாணிக் சர்க்கார், இன்று (30.3.2017) சென்னை பள்ளிவிழா ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.

அவருடைய பேச்சு,,,,

அதிக மார்க் வாங்கிய மாணவ செல்வங்களுக்கு என் கையால் சர்டிபிகேட் கொடுக்கச் சொன்னார்கள். கொடுக்கும்போது அவர்களின் மார்க்கை பார்த்தேன். எல்லாரும் 100க்கு 98, 95, 93 எடுத்திருக்கிறார்கள். அபாரம்.

நான் இவ்வளவு மார்க் எடுத்தது கிடையாது. 90 பக்கமே போகவில்லை. அப்போது அது அபூர்வம். இன்றைக்கு எல்லாமே டாப் மார்க்தான். அப்படி எடுத்தால்தானே மெடிக்கல், இன்ஜினியரிங், லா காலேஜ் சேர முடியும்.
நிறைய நிறைய டாக்டர்கள், இன்ஜினியர்கள், ஆடிட்டர்கள், சயின்டிஸ்டுகள், தலைவர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். திறமையானவர்கள், சாதனையாளர்கள்.

நல்ல மனிதர்கள்தான் குறைந்து கொண்டே போகிறார்கள்.
அவர்களை எப்படி உருவாக்குவது? அதிலே ஏன் நாம் கவனம் செலுத்தாமல் விடுகிறோம்? வல்லவர்களின் அளவுக்கு நல்லவர்களும் நமக்கு தேவை அல்லவா?

இதுதான் பெண்களின் மகத்தான பங்களிப்பை சுட்டிக் காட்ட வேண்டிய இடம். நான் அனுபவத்தில் தெரிந்து கொண்டதை உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்தான் முதல் டீச்சர். உலகத்தை குழந்தைக்கு அறிமுகம் செய்பவளே அவள்தான். அம்மா அப்பா என மனிதர்களை அடையாளம் காட்டுவதில் இருந்து மகனோ மகளோ உலகத்தின் அத்தனை விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள ஆசானாக விளங்குவது அந்த தாய் மட்டுமே.

ஒவ்வொரு தாய்க்கும் நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான். அறிவாளியாக, திறமைசாலியாக, வல்லவனாக மட்டும் பிள்ளைகளை வளர்க்காதீர்கள். நல்லவர்களாக வளரவும் பழக்குங்கள்.

சொந்த தாய் தந்தையை மட்டும் குழந்தைகள் மதித்தால் போதாது. மற்ற தாய் தந்தையரையும் மதிக்க வேண்டும். சக மனிதர்களை மதிக்க வேண்டும். நம்மைவிட மற்றவர்கள் ஏதோ ஒரு வகையில் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் மீது வைக்கும் மரியாதையும் அன்பும் ஒருபோதும் குறைந்துவிடக் கூடாது.

மதம், ஜாதி, மொழி, செல்வம், பிறப்பு உள்ளிட்ட எந்த வேறுபாட்டையும் கருத்தில் கொள்ளாமல் சக மனிதர்களை சமமானவர்களாக மதித்து அன்பு காட்டும்படி தாய்மார்கள் தமது பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.

பொய் சொல்லாதே, பொறாமை கொள்ளாதே, பேராசைப் படாதே, குற்றம் புரியாதே, நேர்மையாக நட, மனிதர்களை நேசி, நாட்டை நேசி, நல்ல விஷயங்களுக்காக சிரமங்களை சகித்துக் கொள்ள மட்டுமல்ல, அவசியமானால் தாய் நாட்டுக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கும் அளவுக்கு நாட்டுப் பற்றையும் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்க வேண்டும். நாடு நன்றாக இருந்தால்தானே நாம் நன்றாக வாழ முடியும்.

இதையெல்லாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க ஒரு தாய் கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவளுக்கு தானாகவே வரும் இந்த பாடமெல்லாம். அதிலும் இந்த தமிழ்நாட்டு தாய்மார்கள் எவ்வளவு அக்கறையுடன் தமது பிள்ளைகளை வளர்க்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

தொண தொண என்று ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் குழந்தைகளைத் திட்டாதீர்கள். நீங்கள்தானே டீச்சர். உங்களிடம் கேட்காமல் யாரை கேட்கும் அது? சரியான பதில் தெரிந்தால் சொல்லுங்கள். தெரியவில்லை என்றால், மகனே நீ கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது. ஆனால் மாலைக்குள் நான் விசாரித்து உனக்கு சொல்கிறேன் என பதில் சொல்லுங்கள். சொன்ன மாதிரி செய்யுங்கள். தவறான பதிலை மட்டும் சொல்லவே சொல்லாதீர்கள்.

ஏனென்றால் நீங்கள் சொல்லும் பதில்தான் குழந்தை வளர்ந்து பெரியவனாகி முதியவனாகி சாகும்வரையிலும் அதன் நினைவில் இருகும். தவிர எந்தக் குழந்தைக்கும் தாய் உசத்தி. என் அம்மா சொன்னால் அது தப்பாக இருக்காது என்று அவை நம்பும். அந்த நம்பிக்கையை வீணடிக்க வேண்டாம். தயவு செய்து உங்கள் ஏனைய பிரச்னைகளால் ஏற்படக்கூடிய கோபத்தை குழந்தை மேல் காட்டாதீர்கள்.

பள்ளிக்கூடத்தில் சேர்த்ததும்குழந்தை மீதான கடமை முடிந்து விடுவதாக பல பெற்றோர் நினைக்கிறார்கள்.இல்லை. அது தவறு. பள்ளியில் இருக்கும் நேரத்தைவிட அதிகமாக குழந்தை இருக்குமிடம் வீடு என்பதால் உங்கள் கடமை முடிந்துவிடவில்லை, தொடரவே செய்கிறது.

படி படி மார்க் எடு என்று மட்டுமே சொல்லிக் கொண்டிராமல் உங்கள் நடத்தை மூலமாக நல்ல விஷயங்களை உணர்த்துங்கள். ஏதாவது ஒரு வகையில் நம்மைவிட வசதி வாய்ப்பு குறைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்கள், காயம் பட்டவர்கள் கஷ்டங்களோடு போராடும்போது வேடிக்கை பார்த்தபடி கடந்துபோக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்காதீர்கள். கஷ்டப்படும் மக்களின் பிரச்னையை தீர்க்க முடியாவிட்டாலும் முடிந்த அளவுக்கு உதவி செய்து கைதூக்கிவிட வழி காண தூண்டுங்கள்.

இயலாதவர்களுக்கு உதவுவது பெரிய பேறு. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால், அவ்வாறு உங்கள் உதவியால் ஒரு ஏழை புன்னகைக்கும்போது அதுதான் கடவுளின் சிரிப்பு என்பதை புரிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் மனதில் பதிய வையுங்கள்.
பொருட்கள் அனைத்தையும்விட மனிதனின் மதிப்பு பெரிதாகும். மனிதர்களை மதிக்கவும், வேற்றுமைகளை இயல்பாக எடுத்துக் கொள்ளவும் கற்றுக் கொடுங்கள். மனிதர்களை பிரிக்கும் எந்த ஒரு வழியையும் அவர்கள் கற்றுக் கொள்ள அனுமதிக்காதீர்கள்.
மேலும் மேலும் வேறுபாடுகளை அடையாளம் கண்டு மனிதர்களுக்கிடையே பிளவுகளை அதிகமாகும் போக்கு எனக்கு கவலை அளிக்கிறது. இதை தடுத்து நிறுத்த நாம் தவறினால் நாகரிகமே அழிந்து போகும். அப்புறம் நாமெல்லாம் எங்கே வாழ முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.

பெற்ற தாய்க்குப்பிறகு டீச்சர்களுக்குதான் இவ்வாறு நல்ல மனிதர்களை உருவாக்கும் பொறுப்பும் ஆற்றலும் உண்டு. புனிதமான இந்தத் தொழிலை முழுமையாகப் பயன்படுத்தி நாட்டுக்கு நல்ல குடிமக்களை உருவாக்கும் கடமையை அவர்கள் தொடர வேண்டுகிறேன்.

புத்தகங்களும் மதிப்பெண்களும் முக்கியம்தான். ஆனால் நல்ல வாழ்க்கைக்கு அவற்றைவிட அதிகம் தேவைப்படுவது நல்ல எண்ணங்களும் ஆரோக்யமான பார்வையும்தான். எவர்வின் போன்ற பள்ளிகள் அந்த பணியை அக்கறையுடன் செய்தால் நமது இந்தியா உலகில் அதற்கென நிர்ணயிக்கப்பட்ட மிக உயர்ந்த இடத்தை நிச்சயமாக அடைந்தே தீரும்.
உங்கள் அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
உங்கள் அன்பான வரவேற்புக்கு ஆத்மார்த்த நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response