பெரியார் சிலை பற்றி எச்.ராஜா புதிய விளக்கம்

திரிபுராவில் பெலோனியா கல்லூரி சதுக்கத்திலுள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் வைக்கப்பட்ட புரட்சியாளர் லெனின் சிலையை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு பாஜகவினர் அகற்றினர். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இது குறித்து பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில், ”லெனின் யார் அவருக்கு இந்தியாவிற்கும் என்ன தொடர்பு கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபூராவில் லெனின்சிலை நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்குக் கடும் எதிர்ப்புகள் வந்தவுடன் அந்தப்பதிவை நீக்கினார். ஒருநாள் கழித்து அவர் அளித்துள்ள விளக்கம்…

எச்.ராஜாவின் முகநூல் பதிவில்,

’நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் Admin என் அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன். கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல.
ஆகவே ஆக்கபூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இனைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது’

என்று பதிவு செய்துள்ளார்.

Leave a Response