சீமானுக்கு கமல் வேண்டுகோள் விடுத்தது ஏன்?

திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் திரிபுராவின் தெற்கு மாவட்டத்தில், பெலோனியா நகரில் வைக்கப்பட்டு இருந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலைகளை பாஜகவினர் மண் அள்ளும் எந்திரம் கொண்டு அகற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதல்களுக்கும், லெனின் சிலை அகற்றப்பட்டதற்கும் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா, ‘இன்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல் தமிழகத்தில் நாளை பெரியார் சிலை அகற்றப்படும்’ என்று முகநூலில் பதிவிட்டார். இவரின் சர்ச்சை கருத்தை தமிழக தலைவர்கள் பலர் கண்டித்தனர்.

எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்க வேண்டாம். எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம்.வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு” என்று தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலை குறித்து சீமான் எந்தக் கருத்தும் சொல்லாத நிலையிலும் அவருக்கும் சேர்த்து வேண்டுகோள் விடுத்துள்ளார் கமல்.

Leave a Response