
மகுடம்: அரங்கத்தில் கொட்டிய இசை அருவி்
ஞாயிறன்று மாலை தேனாம்பேட்டை காமராசர் அரங்கம் சென்றபோது ஒவியர் டிராட்ஸ்கி மருதுவின் கோட்டுச் சித்திரங்கள் வரவேற்றன. மஞ்சள் நிற பின்னணியில் மேடை முழுவதும் இசைக்கலைஞர்கள். இந்தக் கற்பனைச் சித்திரம் மகுடம் இசை நிகழ்ச்சியைப் பார்த்தபோது நனவாகியிருந்தது.
மரக்கிளைகளில் இருந்து பிரிந்து வானில் மிதக்கும் பறவையைப் போல லேசாகியிருந்தது மனம். இசையால் நிரம்பிய மாலை நேரம். அற்புதம் என்றுதான் சொல்லவேண்டும். எங்கு திரும்பினாலும் சமகால கலை, அரசியல் முகங்கள். கொளத்தூர் மணி, டாக்டர் அன்புமணி ராமதாஸ், கனிமொழி, வேல்முருகன், விடுதலை ராசேந்திரன், நடிகர் நாசர் என பார்வையாளர் வரிசையில் பெருமைக்குரிய பலரும் இருந்தார்கள்.
திருச்சி வானொலியில் ஒலிபரப்பான நாட்டுப்புற இசை நிகழ்ச்சியை கேட்டு ரசித்த, ஊர்த்திருவிழாவில் அம்மாப்பேட்டை பால்ராஜ் குழுவினரின் நையாண்டி மேளம் கலந்த கரகாட்டம் பார்த்த, தமுஎசவின் கலை இலக்கிய இரவுகளில் நாட்டுப்புறப் பாடல்கள் கேட்ட இரவுகள் நினைவுகளில் வந்திருந்தன. ஆனால் அந்த நினைவுகளை கலைத்துப்போட்டுவிட்ட பிரம்மாண்டமாக இருந்தது மகுடம் இசை நிகழ்ச்சி.
கலையழகு மேவிய மேடையின் பின்னணி எளிமையின் செழுமை. ஒரே மேடையில் நூற்றுக்கும் அதிகமான இசைக்கலைஞர்கள், ஐம்பதுக்கும் அதிகமான இசைக்கருவிகள் என்று கற்பனை செய்துபார்க்கவே உற்சாகம் தருகிற ஓர் இசைப் பெருவிழாவை நிகழ்த்திக்காட்டி சாதித்திருக்கிறார் மாணவர் நகலகம் செளரிராஜன் அருணாசலம். சிறு நொடிகள்கூட தடையற்ற இசை வெள்ளம். ஒளி ஒலியமைப்பில் இன்னும் நேர்த்தி கூடவேண்டும்.
கவிஞர் அறிவுமதியின் பாடலுடன் அரும்பிய மகுடம் இசை நிகழ்வு காளமேகத்தின் உணர்ச்சிபொங்கும் வரிகளுடன் நிறைவாகியிருந்தது. செண்டை மேளம், மகுடம், எருதுகட்டு மேளம், நையாண்டி மேளம், துடும்பு, பம்பை, பெரியமேளம், பறை, நெட்டுத்தாரை, உடுக்கை, புல்லாங்குழல், கஞ்சிரா, உடுக்கை உள்பட எளிதில் காணக்கிடைக்காத பழம்பெரும் இசைக்கருவிகளின் சங்கமம்.
அரங்கமே இசையால் நிரம்பிய தருணத்தில் மேடையில் மதுரை காரியாபட்டிக்கார்ரகள் தவில், நாயனம், ஒத்து, தமுக்கு, உருமியுடன் நின்றிருந்தார்கள். ஆடாத கால்களும் ஆடத்தொடங்கியிருந்தன. சிலர் தயக்கத்தில் சீட்டில் உட்கார்ந்தபடியே உடலை மட்டும் அசைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் வேலு ஆசானின் பறை அதிரும்போதும், அரங்கம் அதுவாக ஆடத்தொடங்கியது. விதவிதமான பறையிசையால் பார்வையாளர்களை உலுக்கியெடுத்தார். மேடை முழுவதும் நிறைந்திருந்த கலைஞர்கள் அரங்கத்தையே உற்சாகத்தில் திளைக்கவைத்திருந்தனர்.
திருவண்ணாமலை பெரிய மேளம் அடிக்கும்போது உருவான பேரிசை உடலை அசைத்துப்போட்டது. பெரிய மேளத்துடன் குட்டிக்கரணம் போட்டு அடித்த அடி அடங்கவில்லை. அவர்களுடைய ஆட்டத்தில் காட்டிய உடல்மொழி அடடா… என்றிருந்தது. குறுவட்டு போல தோன்றும் மகுடத்தை வெறும் கையால் அடித்து இசையைப் பெருக்கினார்கள். அசுர சாதகம்.
எருதுகட்டு மேளத்தை இசைத்தவர்கள் அத்தனை பேரும் வயசாளிகள். அவர்களுடைய ஆட்டத்தில் அத்தனை உற்சாகம். அது அழிந்துவரும் இசைக்கருவிகளில் ஒன்றாகிவிடுமோ என்ற அச்சம் வந்தது. எருதுகட்டு மேளத்துடன் சிறு நாயனத்தை சிறு மூச்சுகூட விடாமல் இசைத்த பெரியவரை நினைத்தால் பெருமை. கலைஞர்களின் வாழ்க்கை வளமுறுதல் வேண்டும்.
மகுடம் – நையாண்டி மேளம், பறை – செண்டை மேளம், பம்பை – பெரிய மேளம் பறை – மகுடம் என வாத்தியங்களின் போரில் இசை ரசிகர்களுக்கு விறுவிறுப்பு குறையாத கொண்டாட்டம். வெறும் இசை தானா என்றிருந்தபோது, மேளதாளங்களுடன் ஐஸ்வர்யா மணிவண்ணனின் சிலம்பாட்டம். கொஞ்சம் சிவப்பு நிறமும் நல்ல உயரமும் கொண்ட ஒரு பெண் கம்பு சுற்றினால் எப்படியிருக்கும்?
நிகழ்வின் முடிவில் மருதுவின் சித்திரங்கள் இசைக்கலைஞர்களாக உயிர்பெற்று நின்றிருந்தன. சிறு அடி அடித்தாலும் அரங்கத்தில் இசை மழை… மின்னல்… இடி… நையாண்டி மேளம், செண்டை மேளம் என ஒற்றை இசைக்கருவிகளின் நாதத்தை மட்டுமே கேட்டுப் பழகியிருந்த சென்னை மக்களுக்கு ஒரே மேடையில் தமிழர்களின் வல்லிசையை வாரி வழங்கியது மகுடம்.
பல அருவிகள் ஒரே இடத்தில் சேர்ந்து கொட்டிய இசை அனுபவம், இனிவரும் நாட்களில் கடல்களைக் கடந்து உலகத் தமிழர்களையும் சென்றடையட்டும்.
சுந்தரபுத்தன்


