தமிழீழ ஆதரவு ஆஸ்திரேலிய போராளி திடீர் மறைவு


தமிழீழ ஆதரவாளர், முற்போக்காளர், தோழர். ட்ரவர் கிராண்ட் மறைந்தார்.

தமிழீழப் போராட்டத்திற்கும், கோரிக்கைக்கும் சமரசமற்ற ஆதரவையும், இலங்கை மீதான விமர்சனத்தை இறுதிவரை உறுதியுடன் எதிர்ப்பையும் பதிவு செய்து வந்த ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் மறைந்தது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

இலங்கையின் குற்றங்களை ”இலங்கையின் ரகசியங்கள்” எனும் புத்தகத்தின் மூலம் பதிவு செய்து உலகெங்கும் கொண்டு சேர்க்க முயன்றவர். ஆஸ்திரேலியாவில் கிரிக்கேட் விமர்சராக புகழ்பெற்ற ட்ரவர் தனது புகழைக்கொண்டு, ஏழை- எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அம்மக்களது கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்க சமரசமின்றி பயன்படுத்தினார்.

அகதிகள் உரிமைகளுக்காகவும், ஆஸ்திரேலிய பழங்குடி உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் என்று பல்வேறு தளங்களில் தோழர். ட்ரவர் க்ராண்ட்டின் பங்களிப்பு மிக முக்கியமானது.தமது எழுத்துக்களின் மூலம் புகழீட்டிய பல தமிழக எழுத்தாளர்கள் ஈழப்படுகொலைப் பற்றிய சிறு பதிவைக்கூட செய்யாத ஒரு காலத்தில், தனக்கிருக்கும் அங்கீகாரத்தைக் கொண்டு கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் வரை இலங்கையின் இனப்படுகொலை விவரங்களை கொண்டு சேர்த்தவர் தோழர்.ட்ரவர். ஆஸ்திரேலிய அரசின் இலங்கை சார்பான கொள்கைகளை வெளிப்படையாக விமர்சித்து எழுதியவர். அரசோடு சமரசம் செய்துகொள்ளாமல் தொடர்ந்து இயங்கியவர்.

அகதிகள் உரிமைகளை ஆஸ்திரேலியர்களிடத்தில் கொண்டு செல்லவேண்டுமென்பதற்காக ஒரு வானொளியை துவங்கி தொடர்ந்து அதன் மூலமாக ஆதரவினை வளர்த்தவர். ஆஸ்திரேலியாவில் அகதிகள் படும் இன்னல்களுக்காக ஆஸ்திரேலியாவின் முன்னனி பத்திரிக்கைகளில் எழுதியவர்.

2014இல் ஆஸ்திரேலியாவில் அகதிகள் உரிமைகள் இழக்கும் சூழலில் தீக்குளித்து இறந்து போன லியோ சீமான்பிள்ளைக்காக குரல் கொடுத்து பெரும் ஆதரவை திரட்டியது மட்டுமல்லாமல் , தோழர்.ட்ரவர் தமிழகத்திற்கும் வந்து லியோசீமான் பிள்ளையின் குடும்பத்தினரை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறியவர். அக்குடும்பத்தினருக்கு தன்னால் இயன்ற பொருளுதவியை திரட்டி துணை நின்ற அற்புதமான தோழர்.

சல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் தமிழக காவல்துறையும், இந்திய அரசும் செய்த வன்முறை குறித்து கேட்டறிந்த தோழர்.ட்ரவர் க்ராண்ட், மிகவும் நலிவடைந்த உடல்நிலையிலும் போராடும் மக்களுக்கு ஆதரவாக தனது குரலை பதிவு செய்தார். இந்தச் செய்தியை மே17 இயக்கம் ஊடக சந்திப்பில் பதிவு செய்தது. இவரது இச்செய்தியை அடுத்து பிற சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். ”இந்தியா மிகப்பெரும் சனநாயக நாடு எனும் முத்திரை மூலம் ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவின் காவல்துறை நியாயமாக போராடிய மக்களின் மீது நடத்திய தாக்குதல் இந்த முத்திரையை கேள்விக்குள்ளாக்குகிறது. போராடுகிறவர்களை ஆறுமாதம் சிறையில் தள்ளும் இந்திய அரசானது உலகின் மிகமோசமான அரசாட்சி கொண்ட நாடுகளின் ஆட்சிமுறையை ஒத்ததாக இருக்கிறது. இந்திய அரசு தனது வன்முறையான காவல்துறையை பின்வாங்க வைத்து கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். இல்லையெனில் இந்தியாவின் பெயரில் நீங்காத களங்கம் ஏற்படும்” என்று தனது எதிர்ப்புரையில் பதிவு செய்து அனுப்பி இருந்தார்.

தனது உடல்நலக்குறைவுடன் இறுதிவரை சமரசமற்று போராடியும், மூச்சுள்ளவரை அடக்கப்படும் மக்களுக்காக குரல்கொடுத்தும் தனது எழுத்தாற்றல் மூலமாக அடக்குமுறைகளை அம்பலப்படுத்தியும் வந்துள்ள தோழர்.ட்ரவர் க்ராண்ட்டின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. “முதலாளித்துவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுதலை செய்யுங்கள்” என்று எம்மிடம் கடந்த வருடம் பதிவு செய்த தோழர்.ட்ரவர் க்ராண்ட்டின் குரல் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

தோழரின் முழக்கங்களை நடைமுறைக்கு கொண்டுவரும் போராட்டங்களே, சமரசமற்ற போராளி தோழருக்கு செய்யும் மரியாதையாகும்.

போய் வாருங்கள் தோழரே.. உங்கள் கோரிக்கைகளை நாங்கள் சுமந்து வெற்றி நோக்கி முன்னேறுவோம். தமிழீழ விடுதலையையும், இலங்கை அரசு தண்டிக்கப்படுதலையும் , உழைக்கும் மக்கள் முதலாளித்துவத்திடம் இருந்து விடுதலை பெருவதையும் சாதிப்போம்.

தோழர்.ட்ரவர் க்ராண்ட்டுக்கு வீரவணக்கம்

மே பதினேழு இயக்கம்.

Leave a Response