தாய்நிலத்தில் நடத்த முடியாத திலீபன் வீரவணக்க நிகழ்வு உலகெங்கும் நடக்கிறது – சீமான் பெருமிதம்

ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்! இனத்தின் விடுதலை என்ற உன்னதக் கனவிற்காக 12 நாட்கள் நீரின்றி உண்ணாநோன்பிருந்து உயிரீகம் செய்த ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 26-09-2020 சனிக்கிழமை, காலை 11 மணியளவில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, ஈகைச் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தினார். உடன் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிகழ்வு குறித்து சீமான் கூறியதாவது…….,

ஈடுயிணையற்ற போராளி, ஈகைப்பேரொளி எங்கள் அண்ணன் திலீபன் அவர்களினுடைய 33 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று.

அடிமை வாழ்வினும் உரிமைச்சாவு மேலானது என்று எம்மின மக்களுக்கு உணர்த்தியவன், எம்முயிரியினும் மேலானது எம்மினத்தின் உரிமை; அதன் விடுதலை என்பதைத் தமிழ்ச்சமூக மக்களின் இதயத்தில் விதைத்தவன். அநீதிக்கெதிரான அறவழிப் போராட்டத்தின் அடையாளம் அவன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அடுத்தக்கட்ட படிநிலை பாய்ச்சலுக்குத் தன் உயிரைக்கொடுத்து உந்தி தள்ளியவன். 12 நாட்கள் பச்சைத் தண்ணீரும் உமிழ்நீரும் உட்கொள்ளாது பசித்திருந்து தமிழின மக்களுக்கு விடுதலைப் பசியை ஊட்டியவன். அந்த ஒப்பற்ற புரட்சியாளனின் நினைவைப்போற்றுகிற இந்தநாளில் அவனது புனித நோக்கமான தமிழ்தேசிய இனத்திற்கென்று விடுதலை பெற்ற தாயகம் எனும் மகத்தான கனவை நிறைவேற்றுவோம் என்று ஒவ்வொரு தமிழினப் பிள்ளையும் உறுதியேற்பதுதான் அந்த உன்னதமான புரட்சியாளனுக்கும் நாம் செலுத்துகிற உண்மையான வீரவணக்கமாக இருக்க முடியும்.

ஈழத்தில் இன்று எங்கள் வாழ்விடங்களையெல்லாம் ஆக்கிரமித்துக்கொண்டும், திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்திக்கொண்டும் இராணுவ முகாம்களை அமைத்துக்கொண்டு வருகிற சிங்கள இனவெறி அரசு, எங்களது மாவீரர்கள் துயிலும் இல்லங்களையெல்லாம் அழித்து அடையாளமற்றதாக்கிவிட்டது. ஆண்டுதோறும் அண்ணன் திலீபன் அவர்களுக்கு நினைவைப்போற்றி, கனவை நெஞ்சில் சுமந்து, ஈகைச் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்துவது வழமை. ஆனால் இம்முறை அந்த நிகழ்வை நடத்தவிடாமல் அளப்பறிய நெருக்கடியைக் கொடுத்துத் தடுத்துவிட்டது இலங்கை அரசு.

நாங்கள் விழப்பிறந்தவர்கள் அல்ல; விழ விழ எழப் பிறந்தவர்கள். எங்கள் மாவீரர்கள் விழுந்ததெல்லாம் நாங்கள் விழுவதற்கல்ல; எழுவதற்கே! எம் தலைவர் எமக்குக் கற்பித்திருக்கிறார் வீழ்வதல்ல தோல்வி; வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி! அந்த வழியில் உலகெங்கும் பரவி வாழ்கிற பலகோடி தமிழின மக்கள் இன்று இலங்கையில் எமது தாய்நிலம் ஈழத்தில் நடத்த முடியாத எங்கள் திலீபன் அண்ணாவின் வீரவணக்க நிகழ்வை உலகெங்கும் பேரெழுச்சியாக நடத்திக்கொண்டிருக்கிறோம், அந்த மகத்தான மாவீரனுக்கு வணக்கத்தைச் செலுத்திக்கொண்டிருக்கிறோம்.

12 நாட்கள் எமக்காகப் பட்டினி கிடந்தவனுக்காக 12 மணி நேரங்கள் பட்டினி கிடந்து அந்த மகத்தான மாவீரனுக்கு மரியாதை செய்துகொண்டிருக்கிறோம். தமிழினமக்கள் உணர்வெழுச்சி கொண்டு சாதி, மத வேறுபாடுகளை, தேச எல்லைகளைப் பின்னுக்குத்தள்ளி நாங்கள் தமிழகத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள், கனடா தமிழர்கள், ஆஸ்ரேலியத் தமிழர்கள், பிரிட்டன் தமிழர்கள், பிரான்சு தமிழர்கள் என்று தேச எல்லைகளால் பிரிக்கப்படாமல் நாங்கள் தமிழர்கள் என்ற இனவுணர்வும், மானவுணர்வும் கொண்டு ஒன்றிணைந்து, ஓர்மைப்பட்டு, வலிமைபெற்று ஒரு மாபெரும் அரசியல் படையாக மாறி தம்மின விடுதலைக்குப் போராட வேண்டிய காலத்தேவையும் வரலாற்று கடமையும் எமக்குக் கையளிக்கப்பெற்றிருக்கிறது.

அதை உணர்ந்துகொண்டு உலகத் தமிழ்ச்சமூகம் இன்று ஒன்றிணைந்து வருகிறது. இது வரலாற்றில் மிகப்பெரிய மாறுதல், ஒரு புரட்சி! அந்தப் புரட்சிக்கு வித்திட்ட புரட்சியாளன் என் அண்ணன் திலீபன் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி பெருமிதத்தோடும் திமிரோடும் தம் புரட்சிகரமான வீர வணக்கத்தைச் செலுத்துவதில் பெருமையடைகிறது. அண்ணன் அவர்களுடைய இலட்சியக் கனவை சுமந்து நிற்கிற இலட்சக்கணக்கான நாம் தமிழர் பிள்ளைகள் தளராத உறுதியோடு தாயக விடுதலைக் கனவை வென்று முடிப்போம் என்கிற உறுதியை இந்நாளில் ஏற்போம்!

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response