விடுதலைப் புலிகள் மீண்டும் வருவார்கள்- கோத்தபயா அலறல்

விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கும் அச்சுறுத்தல் இருப்பதால், தமிழர் பகுதிகளில் ராணுவத்தினரை குறைப்பது  ஆபத்து என இலங்கை பாதுகாப்புத் துறை செயலரும், மகிந்த ராஜபட்சவின் இளைய சகோதரருமான கோத்தபய ராஜபட்ச அலறியிருக்கிறார்.

இலங்கையில்  மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபட்சவுக்கு ஆதரவு கோரி, தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகையில் அவர் கூறியதாவது.

இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதன் காரணமாக இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக யாரும் நினைத்தால் அது தவறு.

போரின்போது இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள், வெளிநாடுகளில் இன்னும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கி, பயங்கரவாதச் செயல்கள் மூலம் இலங்கையை 1980-களின் இருண்ட காலத்துக்கு இட்டுச் செல்வதற்கான அபாயத்தை மறுப்பதிற்கில்லை.

மிகக் கடுமையான முயற்சிகள் மூலமாகவே, தேசப் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்து வருகிறோம்.

எனவே, ஆட்சிக்கு வர விரும்புபவர்கள் வடக்கு மாகாணத்தில் ராணுவக் குறைப்பில் ஈடுபட முயற்சி செய்தால் அது மிகப் பெரிய தவறாகும் என்றார் கோத்தபய ராஜபட்ச.

மகிந்த ராஜபட்சவை எதிர்த்துப் போட்டியிடும் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபாலா ஸ்ரீசேனாவுக்கு, வடக்கு மாகாணத்தை ஆளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (டி.என்.ஏ.) அண்மையில் ஆதரவு தெரிவித்தது.

இந்நிலையில், தமிழ் வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்காதபடி செய்யவும், தமிழர்கள் அதிகம் உள்ள வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாக்குப்பதிவுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும், யாழ்ப்பாணம், பொலனருவா உள்ளிட்ட இடங்களுக்கு 2,000-க்கும் மேற்பட்ட ராணுவத்தினரை ராஜபட்ச அரசு அனுப்பி உள்ளதாக எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்ரிபாலா ஸ்ரீசேனா வியாழக்கிழமை குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, ஸ்ரீசேனா அதிபராகப் பதவியேற்றால் வடக்கு மாகாணத்தில் நிலைகொண்டுள்ள ராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கான ரகசிய ஒப்பந்தத்தை ஸ்ரீசேனாவும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் மேற்கொண்டதாக ராஜபட்ச தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதனை ஸ்ரீசேனாவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மறுத்துள்ள நிலையில் கோத்தபய ராஜபட்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Response