இந்திய தேர்தல் வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த மே 16-ம் தேதி நடக்க இருந்த தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளிலும் அளவு கடந்த வகையில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாக தேர்தல் பார்வையாளர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் விளக்கம் சொன்னது. முதலில் ஜூன் மாதம் ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல் 6 மாதத்துக்குப் பிறகு நவம்பர் 19-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்பு அறிவிக்கப்பட்ட வேட்பாளர் இப்போது இடைத்தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்றும் தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டது.
அதைத் தொடர்ந்து, அம்மூன்று தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜியும், தஞ்சை தொகுதியில் எம்.ரெங்கசாமியும் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்பின், திமுக வேட்பாளர்களாக தஞ்சை தொகுதியில் டாக்டர் அஞ்சுகம் பூபதி, அரவக்குறிச்சி தொகுதியில் கே.சி.பழனிச்சாமி, திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று திமுக அறிவித்துவிட்டது.
இவ்விரு கட்சிகளின் சார்பிலும், தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதியில் ஏற்கெனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்களே மீண்டும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் செய்தது குற்றம் என்பதுதான் தேர்தல் தள்ளிவைப்புக்குக் காரணமே. அப்படியிருக்க மீண்டும் அவர்களே வேட்பாளர்கள் எப்படி? என்கிற கேள்வி பல தரப்பிலிருந்தும் எழுந்திருக்கிறது.
இக்கேள்விக்கு, பணப்பட்டுவாடா குறித்த வழக்குகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாவிட்டால் வேட்பாளர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், ராஜேந்திரன் என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. அப்போது அரவக் குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச் சர் செந்தில் பாலாஜி யும், தி.மு.க. சார்பில் கே.சி. பழனிசாமியும் போட்டியிட்டனர். அப்போது இவர்கள் இருவரும் மிகப் பெரிய முறைகேட்டில் ஈடுபட்டனர்.
வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டனர். இதனால், எழுந்த புகாரின் அடிப்படையில் அரவக்குறிச்சி தொகுதிக்கு நடைபெற இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த தொகுதிக்கு தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எனவே, நடைபெறவுள்ள தேர்தலில், செந்தில்பாலாஜி, கே.சி.பழனிசாமி ஆகியோர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். இவர்கள் இருவரால்தான் ஏற்கனவே நடைபெற இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. எனவே, இவர்களது வேட்பு மனுக்களை ஏற்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் இரண்டு கட்சிகளும் மீண்டும் அதே வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் வெகுமக்கள் கொதிப்படைந்துள்ளனர். இதனால் சமுக வலைதளங்களில் இதுகுறித்து கடுமையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.