தமிழ் இந்து நாளேட்டில் சமஸ் எனும் ச.ம.ஸ்டாலின் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை

அக்டோபர் 21 தமிழ் இந்து நாளிதழில் சமஸ் என்றழைக்கப்படும் ச.ம.ஸ்டாலின், “காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது, சரி—உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா?”” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதற்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன.

தமிழ்த்தேசியர் பாரதிசெல்வன்இலரா எழுதியிருக்கும் எதிர்வினையில்,

சமஸ் அவர்களே! நீங்கள் தமிழரா? இந்தியரா?
இன்று தமிழ் இந்து நாளிதழில் நமது மதிப்புக்குரிய சமஸ் அவர்கள், “காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது, சரி—உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா?”” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.
தேன் பூசிய ஒரு நச்சு பண்டத்தை தமிழ் இந்து வாசகர்களின் சிந்தனைக்கு உணவாக எழுதி இருக்கிறார்.
என்றைக்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டின் அரசியல் சக்திகள் இணைந்து காவிரி உரிமைக்குப் போராடும் வேளையில் இப்படி, அப் போராட்டத்தைத் தளர்ச்சியுறச் செய்யும் வகையில் இக்கட்டுரையை எழுதி இருக்கிறார்.
நமது நீராதாரங்களை அழிக்கும் வேலைகள்( மணல் கொள்ளை, கழிவு நீர் கலத்தல், நீராதாரங்கள் பராமரிப்பின்மை) தமிழ்நாட்டில் நடைபெறுவதைத் தடுக்கவேண்டும் என்று தனியாக கட்டுரை எழுதினால், அது சரியானதாக இருக்கும். இவற்றைத் தடுக்க முடியாத நமக்கு, காவிரி நீரில் நமது உரிமையைக் கேட்க தகுதி இல்லை என்று கூறுகிறீர்களே, சமஸ் அவர்களே, இது சரியா?
எனது தனிப்பட்ட கருத்து என்று ஒன்றைக் குறிப்பிட்டுள்ளீர்கள்,””ரொம்ப காலத்துக்கு இப்படி நீதிமன்றங்களில் வழக்காடி தண்ணீர்த் தேவையை தீர்த்துக்கொள்ளும் உத்தியை நாம் கையாளமுடியாது. தமிழகத்துக் குள்ளான நீராதாரங்களைக் கொண்டே நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையிலான கட்டமைப்புக்கு நாம் மாறவேண்டும் என்பதே அது””. இப்படிச் சொன்னதற்கு பதிலாக, வழக்குகளைத் திரும்பப் பெற்றுவிடுங்கள், போராட்டத்தை நிறுத்திவிடுங்கள்.. மொத்தத்தில் காவிரியை மறந்துவிடுங்கள் என்று சொல்லி இருக்கலாம். இது கர்நாடகத்தின், சீத்தாராமையாவின், எடியூரப்பாவின் குரல். இது இந்தியத்தின், மோடியின் , சோனியாவின்குரல். இதை உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
தமிழர்கள் கல்லணை கட்டி வேளாண்மையைப் பெருக்கியதை ஆதிக்க வரலாறு என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இதில் ஆதிக்கம் எங்கே வந்தது? கல்லணை மூலம் கர்நாடகத்துக்கு செல்லவேண்டிய நீரை நாம் தடுத்தோமா? காலம் காலமாக திட்டமிட்டு ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்த வந்த சமூக நீதிக் கொள்கையை, நீர்ப் பங்கீட்டோடு ஒப்பிடுகின்றீர்களே இது நியாயமா? சரியா? நாம் அவர்களுக்கு நீர் கிடைக்காமல் தடுத்துகொண்டிருந்தோமா?
ஒடுக்கப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் சரியாகப் படிப்பதில்லை. அவர்களுக்கு இட ஒதுக்கிடு தேவையில்லை என்று முன்னேறிய சமூகங்கள் சொல்வதைப் போல் உள்ளது ,நீராதாரங்களை பாதுகாக்காத நமக்கு காவிரிப் பிரச்சினையில் உரிமை கேட்க தகுதி இல்லை என்று நீங்கள் சொல்லியிருப்பது.
இன்னொரு கருத்தையும் உதிர்த்துள்ளீர்கள். அது மிகக் கொடுமையானது. ””இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்கு இந்த நியாயமே கோலோச்சும். உலகம் முழுக்க ஆயக்கட்டு உரிமைகளில் கடைமடைப் பகுதிக்கான நியாயம், தலைக்கட்டுப் பகுதிகளால் கேள்விக்குள்ளாக்கப்படும் நிலையில், புதிய சூழலுக்கேற்ப நதி நீர் விவகாரங்களை அணுக நாம் பழகவேண்டும்’’ என்று கூறியுள்ளீர்கள். இங்கு நியாயம் என்ற சொல்லைப் பயன்படுத்தி யுள்ளீர்களே. இது உங்களுக்கே நியாயமாகத் தெரிகிறதா? இது எல்சிங்கி உடன்பாட்டிற்கு எதிரானதே. அப்படியானால் ஆதிக்க சக்திகள் சொல்வது அநீதியானதாக இருந்தாலும் , அதை நியாயம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமா?
நமது காவிரி உரிமைக்கெதிராக சொல்லவேண்டியவற்றையெல்லாம் சொல்லிவிட்டு, இறுதிப்பத்தியில் நதிநீர்ப் பகிர்வில் நமது உரிமைகளை பறிகொடுப்பதற்கில்லை என்று சொல்லி உங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
தன் சொந்த இனத்துக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்துவதில் தமிழர்களுக்கு ஈடானவர்கள் வேறு எந்த இனத்திலும் இல்லை. இங்கிருக்கும் மற்றவர்களைவிட நான் நியாயமானவன் என்று காட்டிக்கொள்வதில் தமிழ் அறிவுஜீவிகளுக்கு ஈடானவர்கள் வேறு எந்த இனத்திலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
வாழ்த்துகள் சமஸ் அவர்களே!

இவ்வாறு எழுதியிருக்கிறார்.

Leave a Response