
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே இனயத்தில் புதிதாக வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மொத்த மதிப்பீடு ரூ.27 ஆயிரத்து 570 கோடி.
மூன்று கட்டங்களாக பணிகள் நடைபெற்று 2030ல் முழுமை அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகம் அமைந்தால் இனயம் மற்றும் அதை சுற்றியுள்ள கடலோர கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், மீனவர்களின் குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள் அகற்றும் நிலை உருவாகும் என்றும் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே துறைமுகம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தி தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இன்னொரு பக்கம்,
குளச்சல் இனயம் துறைமுகத்தால், அதன் அருகே 40 கிமீ தொலைவில், கேரளாவில் அமைந்துள்ள விழிஞ்சம் துறைமுகம் பாதிப்படும் என அம்மாநிலம் எதிர்ப்பு குரல் எழுப்புகிறது. அந்த மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையில் டெல்லிக்கு படையெடுத்து பிரதமர் மோடியிடம் முறையிட்டுள்ளனர்.
இதற்கிடையே சிங்கள அரசும் இத்துறைமுகம் அமைவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பழ.நெடுமாறன் தெரிவிக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குளச்சல் இனயம் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதை தடுக்க ரனில் விக்கிரமசிங்கே ஈடுபட்டுள்ளார். குளச்சல் துறைமுக திட்டத்தை செயல்படுத்தினால் இலங்கையின் ஒரே துறைமுகமான கொழும்பு பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் என அப்போதைய பிரதமர் நேருவிடம் இலங்கையின் அன்றைய பிரதமர் சீறிமா பண்டாரநாயகா வேண்டிக்கொண்டதன் காரணமாக குளச்சல் துறைமுக திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இப்போது மீண்டும் அதே முயற்சியை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது.
குளச்சல் துறைமுகம் அமைக்கப்பட்டால் கொழும்பு துறைமுகம் தனது முக்கியத்துவத்தை இழக்கும். பொருளாதார ரீதியாக இலங்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இலங்கையின் சூழ்ச்சி வலையில் சிக்காமல் மத்திய அரசு குளச்சல் துறைமுக திட்டத்தை நிறைவேற்றும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


