காவிரிச் சிக்கலில், ஜெயலலிதா குறட்டைவிட்டுத் தூங்குகிறார் – சுப்புலட்சுமி கொதிப்பு

பேரறிஞர் அண்ணாவின் 108வது பிறந்த நாள் விழாவில் திமு கழக துணைப் பொதுச் செயலாளர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோட்டில் பேசியது . . . .

இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 108வது பிறந்தநாள். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கலைஞர் அவர்களாலும் மற்ற மாவட்டங்களிலே கழக முன்னோடிகள், கழக செயல்வீரர்கள் ஆகியோர் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இன்றைய நாளை எழுச்சியோடு கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

அண்ணா பிறந்தநாள் நமக்கு மகிழ்ச்சியைத் தந்திருந்தாலும் கூட இன்றைக்கு இந்த மண்ணில் எந்த மக்களுக்காக பேரறிஞர் அண்ணா இந்த இயக்கத்தை உருவாக்கி இந்த இயக்கத்தை வளர்ப்பதற்காக பல்வேறு தியாகங்களைச் செய்து இந்த இயக்கத்தை ஆட்சிப் பொறுப்பிலே அமர வைத்து ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நல்ல பணிகளை ஆற்றித் தந்தாரோ அந்த நிலைமை இன்றைக்கு மாறி தமிழகத்தில் ஒரு காட்டாட்சி தர்பார் நடந்து கொண்டிருக்கிறது.

மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசு இன்றைக்கு தமிழ்நாட்டிலே நடந்து கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக தமிழகத்தில் பெரும் பகுதியாக வாழ்ந்த கொண்டிருக்கிற விவசாயப் பெருமக்களும் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது மிகவும் வேதனையளிக்கிறது.

இந்த அரசு செய்து கொண்டிருக்கிற அக்கிரமங்களைத் தட்டிக் கேட்கின்ற வகையில் தான் நாளை தமிழகம் தழுவிய அளவிலே எல்லாத் தரப்பு மக்களும் மிகப்பெரிய கடையடைப்பு போராட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள். அதில் திமுகவும் கலந்து கொள்கிறது.

இந்த பிரச்சனையை அதிமுக அரசு ஒரு பெரிய பிரச்சனையாக கருதியதாகத் தெரியவில்லை. கடந்த 10 நாட்களாக கர்நாடகத்தில் உள்ள தமிழ் மக்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள். தமிழகத்திலிருந்து செல்லும் பேருந்துகள், லாரிகள், கார்களில் எல்லாம் தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றன இன்றைக்கு அதிமுக அரசு குறிப்பாக முதலமைச்சர் ஜெயலலிதா குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த பிரச்சனையை பாராளுமன்றத்திலே எழுப்பி பிரதமர் மோடியினுடைய கவனத்திற்கு கொண்டு போகக் கூடிய அதிமுக எம்.பி., க்கள் அத்தனை பேரும் கேலிக்கூத்தாக பாராளுமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

மாநிலங்களவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், பேசுகிறார், காஷ்மீர் பியுட்டிபுல் காஷ்மீர் என்று பேசுகிறார். தமிழகத்தில் மக்கள் தண்ணீர; இன்றி செத்துக்கொண்டிருக்கிறார்கள். காஷ்மீரிலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 15 நாட்களாக மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். இந்தச் சூழலில் அதிமுக எம்.பி., ‘காஷ்மீர் பியுட்டிபுல் காஷ்மீர்” என்று பாடுகிறார். நேற்று அந்த எம்.பி., மீண்டும் எம்.ஜி.ஆர் பாடல் ஒன்று, ‘காவேரி கரையிருக்கு, கரை மேலே பூவிருக்கு, பூப்போலே பெண்ணிருக்கு” என்று பாடுகிறார்.

நான் அதிமுகவினரைப் பார்த்துக் கேட்கிறேன் காவிரி எங்கிருக்கிறது. காவிரிக் கரை எங்கிருக்கிறது. காவிரிக் கரையில் பூ பூத்திருக்கிறதா? அந்த பூப் போல தான் பெண்கள் இன்று இருக்கிறார்களா?

காவிரியில் புல்லும், புதரும் மண்டிக் கிடக்குது. காவிரியின் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய குடும்பங்களில் உள்ள பெண்களைப் பாருங்கள் அவங்க பூ மாதிரியா இருக்காங்க? விவசாயமின்றி, வருமானமின்றி எவ்வளவு வேதனையுடன் இருக்கிறார்கள். இதெல்லாம் அதிமுகவில் யாருக்கும் தெரியாது. எனக்குக் கொதிக்கிறது உள்ளமெல்லாம். எந்தத் தரப்பு மக்களும் நிம்மதியாக இல்லை.

இப்படிப்பட்ட நிலை எதிர்காலத்திலே மாற வேண்டும் என்பதற்காக பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சியிலே நாமெல்லோரும் உறுதியேற்போம். இந்த ஆட்சியை அகற்றி விட்டு ஒரு நல்லாட்சி கொண்டுவர எங்களின் உயிரைக் கொடுத்தேனும் பாடுபடுவோம் என்பதை இந்த நல்ல நாளிலே தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response