தமிழனை அடித்தால் தண்டனை உண்டு எனும் அச்சத்தை ஏற்படுத்துவோம் – கவிஞர் பச்சியப்பன்

காவிரி நீர்ச்சிக்கல் காரணமாக, கர்நாடகாவில், தமிழர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. இதில், தமிழர்கள் தாக்கப்பட்டனர்; அவர்களது உடமைகள் சேதப்படுத்தப்பட்டன.இதற்குக் கண்டனம் தெரிவித்து, தமிழகத்தில், இன்று (செப்டம்பர் 16) முழு அடைப்புப் போராட்டத்திற்கு, விவசாயிகள் அழைப்பு விடுத்தனர். திமுக உள்ளிட்ட எல்லாக்கட்சிகளும் இதற்கு ஆதரவளித்தன. முழு அடைப்பு முழுவெற்றி அடைந்தது. இதையே ஒரு நல்ல தொடக்கமாகக் கொண்டு தமிழின விடிவுக்கான செயலில் இறங்கவேண்டும் என்று கவிஞர் பச்சியப்பன் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

கன்னட வெறியர்கள் நம் தமிழரைத்தாக்கியதைக் கண்டு கையறு நிலையில் தவித்தமக்கள் இன்று தங்களின் எதிர்ப்பை இந்தியக் குடியரசு வழங்கியிருக்கிற சட்டத்திற்கு உட்பட்டு எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். சிறுசிறு தெருக்களிலும் இதற்கான மவுன எதிர்ப்புக்குரல் அழுத்தமாகக் கேட்கிறது.

இது வெறியாட்டம் ஆடிய கன்னட வெறியர்களுக்கும் வேடிக்கை பார்த்த இந்திய அதிகாரக் கூட்டத்திற்கும் புரிகிறதோ இல்லையோ நமக்குள்ளாக நாம் சொல்லிக்கொள்ளும் ஆறுதலிது. உலகில் கைவிடப்பட்ட இனங்களில் ஒன்று தமிழினம். நம் கையே நமக்குதவி.

உலகத்தின் எந்த மூலையிலும் தமிழினம் துயருரக்கூடாது எனில் ஓட்டு அரசியல் கடந்த ஒற்றுமையும் செயல் திட்டமும் தேவை. இது நம்காலத்தின் அடிப்படையான தேவை. இல்லையெனில் புலம்புவது ஒன்றே நம் பிழைப்பாகிவிடும். இதை ஓட்டு அறுவடைக்காகச் சிலர் பயன்படுத்திக்கொள்ளவும் செய்வர்.

வெறியாட்டம் ஆடியவர்களுக்கு தகுந்த தண்டனையும் பாதிப்புக்குள்ளான தமிழர்களுக்கு இழப்பீடும் பெற்றுத்தருவதிலிருந்தே இதனைத் தொடங்கலாம். அடித்தால் தண்டனை உண்டு என்கிற அச்சம் ஏற்படாதவரை கன்னட வெறியர் காவிரிச் சிக்கல் வருகிறபோதெல்லாம் கையோங்குவர்.

ஊரில் சண்டை நடக்கிறபோது விலக்கிவிடுகிறேன் பேர்வழி என்று அடிக்கிறவனை விட்டுவிட்டு அடிவாங்குகிறவனைப் பிடித்துக்கொள்வார்கள். இது அடிக்கிறவனுக்கு சாதகமான வஞ்சகச்செயல். தமிழருக்கும் இதுவே காலம்தோறும் நடக்கிறது.

தீர்வுக்கு தமிழரே விடைகாண வேண்டும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response