சென்னைக்கு மிக அருகில் இருந்தபோதும் சென்னையின் உலகமயமாதல் வசீகரத்தில் வீழ்ந்துவிடாமல் விவசாயம்தான் அடிப்படைத் தேவை என்று வாழும் அப்பாவுக்கும், விவசாய நிலத்தை விற்று அரசாங்க வேலை வாங்கவேண்டும் என்று நினைக்கிற மகனுக்குமான போராட்டம்தான் படம்.
இக்கதையை வைத்துக்கொண்டு அரசாங்கமே மது விற்பனை செய்வதையும் அதை வைத்துக் கொண்டு அரசியல் செய்பவர்களையும் சகட்டுமேனிக்கு வறுத்து எடுத்துவிட்டார் இயக்குநர் கார்வண்ணன்.
அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் மக்கள் விரோதச் செயல்களைப் பட்டியல்போட்டுக் காட்டியிருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் பிரபுரணவீரன், நாயகியாக நடித்திருக்கும் ஷ்ரவ்யா ஆகிய இருவருமே நல்வரவுகள்.
இருவருக்குமான காதல் காட்சிகள் ரசிக்கவைக்கின்றன. காதலனின், மதுக்கடைக்கு வேலைக்குப் போவது என்கிற இலட்சியத்துக்காக நாயகியும் அவரது அம்மாவும் சேர்ந்து பாடுபடுவது சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற காட்சிகள்.
அரசியல் கட்சிகளையும் சமுதாயத்தையும் விமர்சனம் செய்வதற்காகவே ரவிமரியா, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் பயன்பட்டிருக்கிறார்கள்.
தமிழக அமைச்சராக நடித்திருக்கும் இயக்குநர் டி.பி.கஜேந்திரன் அமைச்சராகவே வாழ்ந்திருக்கிறார். அவருக்கு மூன்று மனைவிகள். ஒவ்வொருவரிடமும் இருந்து வருகிற தொலைபேசி அழைப்புகளை அவர் ஏற்கும் விதமே விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.
மதுக்கடைகளை மூடிவிடவேண்டும் என்கிற தமிழக மக்களின் விருப்பத்தை இயக்குநரும் கொண்டிருப்பது படத்தின் இறுதிக்காட்சியில் தெரிகிறது. ஆனால் உண்மை இடைவேளைக்காட்சி போலே இருப்பதுதான் சோகம்.
தற்போதைய தமிழக அரசியல் மீது வெறுப்பாக இருக்கும் அனைவருக்கும் வாய்விட்டுச் சிரித்து மகிழத்தக்க வசனங்கள் இருக்கின்றன.
நல்ல கருத்தை அடிப்படையாகக் கொண்டு ரசிக்கத் தக்க காட்சிகளையும் எடுத்திருக்கிற இயக்குநர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.