அருவருப்பு என்று சேரன் பேசியது அதிர்ச்சியளிக்கிறது, உடனே திரும்பப்பெற வேண்டும் – கவிதாபாரதி ஆவேசம்

தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது.. ஆனா அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான். இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம்.. எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம். ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது” என்று இயக்குநர் சேரன் பேசியதற்குக் கண்டனங்கள் வலுக்கின்றன.

இயக்குநர் கவிதாபாரதி இதுபற்றிக் கூறியிருப்பதாவது….

இலங்கைத் தமிழர்கள்தான் திருட்டு வி.சி.டி. தயாரிக்கிறார்கள்.. அவர்களுக்காகப் போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று இயக்குநர் சேரன் ஒரு படவிழாவில் பேசியிருக்கிறார்..
யார் தவறு செய்தார்களோ அவர்கள்மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுதான் சரியான செயல்..
அதைவிடுத்து ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் திருட்டு வி.சி.டி.களுக்கு குற்றவாளிகளாக்குவது கண்டிக்கத்தக்கது …
சென்னையிலும், தமிழகம் முழுவதும் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை திருட்டு வி.சி.டி.கள் பகிரங்கமாக விற்கப்படுகின்றன.. அதைச் செய்வதும் ஈழத்தமிழர்கள்தானா சேரன்..?
அவர்களுக்காகப் போராடியது அருவருப்பாக உள்ளது என்னும் சொல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.. எதோ இவர் போராடி தனிஈழம் பெற்றுக் கொடுத்தது போலவும், ஈழத்தமிழினம் அதற்குத் தகுதியில்லாதது போலவும் அவர் வருத்தப்பட்டிருக்கிறார்…
சுப்பிரமணியசுவாமிகூட இந்தளவுக்கு ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தியதில்லை..
தங்கள் கனவு சிதைந்து, இன்றும் பல சொல்லவொணாத் துயரங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தும் தன் வார்த்தைகளை சேரன் திரும்பப்பெற வேண்டும்…

1 Comment

Leave a Response