சூழலைக்காக்கப் போராடும் எளிய மக்கள் – முதல்வர் கவனிக்க வேண்டுமென இயக்குநர் சேரன் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பாலியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பாலியப்பட்டு, புதிய காலணி, அருந்ததியர் பகுதி, சின்ன புனல்காடு, மாரியம்மன் நகர், அண்ணா நகர், செல்வபுரம், வாணியம்பாடி ஆகிய கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள அந்த கிராமங்களின் விவசாய நிலங்களில் பூ, காய்கறிகள், பழங்கள், நெல், மணிலா, கரும்பு மற்றும் சிறுதானியங்களை சாகுபடி செய்து வருகிறார்கள். கால்நடைகள் வளர்ப்பும் முக்கியமானதாக இருக்கிறது.

இந்நிலையில், அந்தப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், கிணறுகள் மற்றும் வீடுகள் ஆகியவற்றைக் கைப்பற்றி சிப்காட் (தொழிற்பேட்டை) அமைக்க தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது. இதற்காக, வருவாய்த் துறை மூலமாக நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

விவசாயத்தையும், எங்களது வாழ்வாதாரத்தையும் அழித்து சிப்காட் கொண்டு வரும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும். இயற்கை வளங்கள், விளை நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் சுற்றுச்சூழலை அழித்து கொண்டு வரப்படவுள்ள சிப்காட் எங்களுக்குத் தேவையில்லை.

தொழிற்சாலைக் கழிவுகளில் திருவண்ணாமலை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நீராதாரம் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஐரோப்பா உட்பட பல பகுதியில் இருந்து இனப் பெருக்கத்துக்கு பறவைகள் வந்து செல்லும் வலசை பாதையும் பாதிக்கப்படும்.

கவுத்தி – வேடியப்பன் மலையில் உள்ள வன விலங்கள், மூலிகைத் தாவரங்கள் மற்றும் அங்கிருந்து நீரோடைகள் அழிந்துபோகும். பெரும் முதலாளிகளுக்காக பூர்வகுடிகளாக உள்ள கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம். அரசு மற்றும் தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்

இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதற்காக அப்பகுதி மக்கள் கடந்த 85 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.

அந்தப் போராட்டத்தை எந்தக் கட்சியும் கண்டுகொள்ளவில்லை. அதேசமயம் மேற்குத்தொடர்ச்சிமலை பட இயக்குநர் லெனின்பாரதி தொடர்ச்சியாக இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துவருகிறார்.

#SavaPaliapattuFromSipcot #நீர் நிலம் காற்றை அழித்து வளரச்சி வேண்டாம் #நிலமே எங்கள் தலமை #நிலமேஎங்கள்உரிமை #சிப்காட்எதிர்ப்புவிவசாயமக்கள்இயக்கம்

ஆகிய குறியீட்டுச் சொற்களுடன் இயக்குநர் லெனின்பாரதி பகிர்ந்த தகவலை எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குநர் சேரன்,
கவனத்தில் கொள்வார் மாண்புமிகு முதல்வர் என நம்புகிறேன். மக்களின் வாழ்வாதார பூமியை அழித்து எந்த முன்னேற்றமும் தேவை இல்லை. இந்த விசயத்திற்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் நண்பரும் இயக்குனருமான லெனின்பாரதி அவர்களுடன் நானும் நிற்கிறேன்.. பகிருங்கள் தோழர்களே.

என்றும் பதிவிட்டிருக்கிறார்.

அவருடைய இந்தப்பதிவுக்கு ஏராளமானோர் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Response