லிங்கா-திரைவிமர்சனம்

1939 இல் சோலையூர் என்கிற ஒரு ஊரில் ஒரு அணை கட்டி வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரைச் சேமிப்பதுதான் நிரந்தரததீர்வு என்று முடிவுசெய்கிறார் மாவட்டாஆட்சியராக இருக்கும் ரஜினி. ஆனால் வெள்ளையர்கள் அதை ஏற்க மறுக்கின்றனர். அதனால் ஆட்சியர் வேலையை உதறிவிட்டு சொந்தச்செலவில் அணை கட்ட வருகிறார்.எப்படி  என்றால் அவர் ஒரு ராஜா என்றும் அவருக்குப் பல அரண்மனைகள் இருக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.அப்பாவின் விருப்பத்துக்காக ஐசிஎஸ் படித்து ஆட்சியர் வேலைக்கு வந்தவராம். ஊர்மக்கள் துணையுடன் அணைகட்ட முயலும்போது வெள்ளையர்களாலும் அவர்களுக்குத் துணைபோகும் துரோகிகளாலும் ஏகப்பட்ட சிக்கல்கள். அவற்றையெல்லாம் எதிர்கொண்டு அணைகட்டி முடித்ததும் அந்த ஊரே அவரை விரட்டியடிக்கிறது. அது எதனால்? அதன்பின் என்ன? என்பதுதான் படம்.

படம் தொடங்கும்போது வெளிநாடுகளில் விதவிதமாக உடைகளணிந்து கொண்டு அரைகுறை உடையணிந்த பெண்களுடன் துள்ளாட்டம் போட்டு அறிமுகமாகிறார் ரஜினி. 1939 இல் அணைகட்டுகிற ஊரில் இருக்கும் சோனாக்ஷி சின்காவுடன் ஆடிப்பாடுகிறார். தற்காலத்தில் அனுஷ்காவுடன் ஆட்டம்போடுகிறார். எல்லாஇடங்களிலும் இளமையும் துள்ளலும் இருக்கவேண்டும் என்று கவனமாக இருந்திருக்கிறார் ரஜினி.

அதேசமயம், அறுபது வயதிலும் டூயட் பாடுவது கஷ்டமாக இருக்கிறது என்று அவரே சொல்லிவிட்டதால் அவரைப் பார்க்கும்போதெல்லாம் அந்த எண்ணம் வருவது தவிர்க்க முடியவில்லை. நிறைய ஒப்பனை மற்றும் தொழில்நுட்பங்களில் அவரை இளமையாகவே காட்டியிருக்கிறார்கள். ஆனால் உடல் மொழிக்கு ஒப்பனை போடமுடியாதே.

அவருடைய தடுமாற்றம் வெளிப்படத்தான் செய்கிறது. அணைகட்டும்போதே ரஜினி கட்டிய ஒரு கோயிலை அப்போதிருந்தே பூட்டிவைத்திருக்கிறார்கள். அந்தக்கோயிலை லிங்கேஸ்வரனின் வாரிசான அவருடைய பேரன்தான் வந்து திறக்கவேண்டும் என்று ஊர்ப்பெரியவர் சொல்கிறார். அதனால் வாரிசைத் தேடிவந்தால் அவர் சென்னையில் திருடனாக இருக்கிறார்.

சந்தானம், கருணாகரன், பாலாஜி இன்னொரு குண்டர் ஆகியோரை வைத்துக்கொண்டு திருட்டுவேலைகள் செய்கின்றனர். சந்தானம் வருகிற காட்சிகளிலெல்லாம் சிரிப்புவெடிகளைத் தூவி ரசிக்கவைக்கிறார். பல்வேறு தகிடுதத்தங்கள் செய்து சோலையூருக்கு ரஜினியைக் கூட்டிவருகிறார் அனுஷ்கா. நெஞ்சிலேயே ஒளிப்படக்கருவியை வைத்துக்கொண்டு அவர் செய்யும் அலம்பல்கள் ரசிக்கிற மாதிரி இருக்கிறது.

ஒரு நெக்லஸைத் திருட வருகிற ரஜினியிடம் அவர் சிக்கிக்கொள்ளும் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. உன் திறமைக்கு பார்லிமெண்ட் போனா நீ எங்கேயோ போயிடுவிய்யா என்று சொல்கிறார் அனுஷ்கா. ரஜினியே எவ்வளவு பின்வாங்கினாலும் அவரை வைத்து அரசியல் வசனங்கள் வைப்பது தொடர் கதையாகிவிட்டது. சோலையூருக்குக் கோவிலைத் திறக்கவருகிற பேரன் ரஜினி சும்மா கோவிலைத் திறந்துவிட்டுப் போய்விட்டால், படத்தை ஓட்டமுடியாதே.

அங்கே உள்ளூர்அரசியல்வாதியால் பெரியசிக்கல் வருகிறது. அதை அவர் சமாளித்து மறுபடி அந்த ஊரைக்காப்பாற்றுகிறார். அரசியல்வாதி வேடத்தில் ஜெகபதிபாபு, ஊர்ப்பெரியவர் வேடத்தில் கே.விஸ்வநாத், காவல்துறை ஆய்வாளர் வேடத்தில் பிரமானந்தம் என்று தெலுங்கு நடிகர்கள் படத்தில் நிறைந்திருக்கிறார்கள். அணைகட்டும் காட்சிகளின் பிரமாண்டம், ரயில் சண்டைக்காட்சிகள், பாடல்களுக்கு பெரிய பெரிய கூடங்கள் அமைப்பது என்று மிகத்தாராளமாகச் செலவு செய்திருக்கிறார்கள்.

ஆனால் எல்லாக்காட்சிகளும் ரஜினியின் முந்தைய படங்களிலேயே பார்த்த மாதிரி இருக்கிறது. அதனால் படம் பார்க்கும்போது சலிப்பு ஏற்படுகிறது. பெரிய ராஜாவாக இருப்பவர் அரண்மனையை விட்டுவிட்டு ஊர்மக்களுக்காக ஆண்டுக்கணக்கில் அங்கேயே இருந்து அணைகட்டுகிறார். ஆனால் ஒரே நிகழ்வில் அவரை ஒட்டுமொத்த ஊரும் ஒன்றுசேர்ந்து ஊரைவிட்டு விரட்டியடிப்பது, ரஜினியை நல்லவராக்குவதற்காக ஒட்டுமொத்த ஊர் மக்களையும் கெட்டவர்களாக்கும் காட்சிகள் நம்பத்தகுந்ததாக இல்லை.

சண்டைக்காட்சிகளும், பாடல்காட்சிகளும் சிவாஜி மற்றும் எந்திரன் படங்களை நினைவுபடுத்துகிற மாதிரியே இருக்கின்றன. ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, ரஜினியை இளமையாகக் காட்ட மெனக்கெட்ட அளவுக்கு காட்சிகளில் காட்டாமல் விட்டுவிட்டார் என்று சொல்லலாம்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் கேட்கிற மாதிரி இருக்கின்றன. பின்னணிஇசையிலும் அவர் குறைவைக்கவில்லை. படம் சுமார் மூன்றுமணி நேரம் ஒடுகிறது. அவ்வளவு நேரம் ரஜினியைப் பார்த்துக்கொண்டிருப்பது கஷ்டமாக இருக்கிறது. சந்தானம் மட்டும் படத்தில் இல்லையென்றால், இஞ்சி தின்ற குரங்குபோல படத்தைப் பார்த்துவிட்டு வரவேண்டியதுதான்.

Leave a Response