மின்கட்டண உயர்வை திரும்பப்பெறாவிட்டால் கடும் போராட்டம்-சீமான் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் அனைத்து மின் நுகர்வோருக்கும் 15 சதவீத மின் கட்டண உயர்வு  அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில், சீமான் கூறியிருப்பதாவது:

மக்களைத் திணறடிக்கிற அளவுக்கு மின்சாரத்துக்கு 15 சதவீத கட்டண உயர்வை அறிவித்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. கடுமையான மின் தட்டுப்பாட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்சியை ஏற்படுத்தி வந்த தமிழக அரசு, யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி, மின்சாரமே இருந்தாலும் அதனைப் பயன்படுத்த முடியாத இக்கட்டை உருவாக்கி மறுபடியும் மக்களை இருளுக்குள் தள்ளுகிற வேலையைச் செய்திருக்கிறது.

ஏற்கெனவே மத்திய அரசின்  மக்கள் விரோத போக்கால் மண்ணெண்ணெய் விநியோகம் முழுதாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. பொது விநியோகத் திட்டத்திலிருந்து வழங்கப்படும் மண்ணெண்ணெய்க்கும் திடீரென  தட்டுப்பாடு உருவாகி இருப்பதால் அடித்தட்டு ஏழை மக்கள் வீட்டில் விளக்கேற்றக்கூட வழியில்லாத நிலையில் அல்லாடித் தவிக்கிறார்கள். இந்நிலையில், மின்சாரக் கட்டணத்தையும் வகைதொகை இல்லாமல் உயர்த்தி அடித்தட்டு மக்களின் நெஞ்சில் இடியை இறக்கியிருக்கிறது தமிழக அரசு.

தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பாதிக்காத வகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கூடுதலா ரூ. 1310.23 கோடி மானியம் வழங்கப்படும் எனவும், இதனால் 94 சதவீத மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது எனவும் தமிழ்நாடு அரசு  விளக்கம் தெரிவித்திருப்பது மக்களுக்கு எத்தகைய நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. வீடுகளுக்கு 1 முதல் 100 யூனிட் வரை, யூனிட் ஒன்றுக்கு 40காசு உயர்வு,101 முதல் 200 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 45 காசு உயர்வு, 201முதல் 500 யூனிட் வரை முதல் 200 யூனிட்டுகளுக்கு, யூனிட் ஒன்றுக்கு 50 காசு உயர்வு 201 முதல் 500 யூனிட்டுகள் வரை, யூனிட் ஒன்றுக்கு 60 காசு உயர்வு 500யூனிட்டுகளுக்கு மேல், யூனிட் ஒன்றுக்கு 85 காசு உயர்வு என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது எப்படி மக்களைப் பாதிக்காததாக இருக்கும்? அடித்தட்டு கூலி மக்கள் தொடங்கி விவசாயிகள், சிறுகுறு தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையுமே வஞ்சிக்கக்கூடிய கடுமையான கட்டண உயர்வு இது.

கூடங்குளத்தில் அணு உலை தொடங்கினால் மின் பற்றாக்குறை முடிவுக்கு வந்துவிடும் என்றும், மின்சாரம் மிக எளிமையாகக் கிடைக்கும் என்றும் நம்பிக்கை வார்த்தவர்கள் இத்தகைய கட்டண உயர்வுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் விலைவாசி உயர்வே மக்களை அனுதினமும் சாகடித்துவரும் நிலையில், மின் கட்டணமும் இரட்டிப்பு துயரமாகி சித்திரவதைக்கு ஆளாக்கியிருக்கிறது.

மிகப் பரவலாக நடக்கும் மின் திருட்டைத் தடுக்காமலும், அந்நியத் தொழில் நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரத்தை வாரி வழங்கியும்,மின்வாரியப் பணிகளை ஆக்கபூர்வமாகச் செயல்படுத்தாமலும் இருப்பதால்தான் மின்சார வாரியம் மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகி வருகிறது. இதற்கிடையில் தனியார் மின்சாரத்தைப் பெறுவதிலும் தகுதியான ஆட்களை அணுகாமல் அதிக விலை கொடுத்து வாங்கியும் நஷ்டமாகிவரும் மின்வாரியம் நடப்பாண்டு மிகுதியான நிதிச்சுமையை எதிர்க்கொள்ள  வேண்டி இருப்பதாகச் சொல்லி கட்டண உயர்வுக்குக் காரணம் சொல்வது எவராலும் ஏற்க முடியாதது.

எனவே மிகக் கடுமையான மின்கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். இல்லையேல், மின்கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மிகக் கடுமையான போராட்டங்களைக் கையில் எடுக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response