யாழ்ப்பாணம்-கடல்நீரில் இருந்து குடிநீரைப் பெறும் திட்டம்

இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிதண்ணீர் வழங்குவதாக இருந்தால் மாத்திரமே இரணைமடுக் குளத்தைப் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யமுடியும் என்றிருந்த நிலை மாற்றப்பட்டு, எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் இரணைமடுக்குள அணைக்கட்டைப் புனரமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி வழங்க முன்வந்திருப்பதாக வடமாகாண விவசாய மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் பகுதி குடிதண்ணீரில் கழிவு எண்ணெய் பரவியுள்ளமை தொடர்பான வாராந்தக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை அவரது அலுவலகத்தில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் பொ. ஐங்கரநேசன் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் – இரணைமடுக் குளத்தை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள், தங்களது தேவைகளுக்குப் போதிய நீர் இல்லாத நிலையில் இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிதண்ணீர் எடுத்துவருகின்ற மத்திய அரசின் நீர்வழங்கல் மற்றும் வடிகால் சபையின் திட்டத்துக்குத் தங்கள் கடுமையான எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றார்கள். இதற்குத் தொலைநோக்குள்ள புத்திஜீவிகளும் ஆதரவு தெரிவிக்காத நிலையில், இத்திட்டத்துக்குக் கடனுதவி செய்யும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் நாம் மாற்றுத் திட்டம் ஒன்றை முன்வைத்திருந்தோம். நீர்வழங்கல் வடிகால் அமைச்சுக்கும் இதனைத் தெரியப்படுத்தியிருந்தோம். எமது கோரிக்கைகளை ஏற்று, இரணைமடுக்குள அணைக்கட்டைப் புனரமைக்க எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் நிதி ஒதுக்கீடு செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.

புதிதாக மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தில், இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிதண்ணீர் எடுத்து வருவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்திலேயே கடல்நீரில் இருந்து குடிநீரைப் பெறுவதற்கான திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. மருதங்கேணி கடற்பகுதி இதற்கான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்தோடு, ஆசிய அபிவிருத்தி வங்கி சுன்னாகம் பிரதேசத்தில் குடிதண்ணீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பதையும் கருத்தில் எடுத்துள்ளது. இது தொடர்பான ஆய்வுகளுக்கும், சுத்திகரிப்பு முறைகளுக்கும் நிதியை ஒதுக்கியிருப்பதோடு, கடல்நீரைக் குடிதண்ணீராக்கி வழங்கும் திட்டத்தின் கீழ் நீர் பெறும் இடங்களில் ஒன்றாகச் சுன்னாகத்தையும் உள்ளடக்கியுள்ளது. மத்திய அரசின் நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளது.

இரணைமடுவைப் புனரமைத்தல், கடல்நீரைக் குடிதண்ணீராக்குதல், யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குள் கழிவகற்றும் வசதிகளை ஏற்படுத்தல் ஆகிய மூன்று திட்டங்களுக்கும் மொத்தமாக 390 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத்தொகை பழைய திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் இரட்டிப்பு மடங்கு. இதில் பெரும் பங்கை ஆசிய அபிவிருத்திவங்கி கடனாக வழங்க முன்வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Response