பாலாற்றில் ஆந்திரா கட்டியுள்ள நீர்த்தேக்கத்தை இடிக்க வேண்டும் – பெ.மணியரசன் அதிரடி

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் ஆறாவது கூட்டம், தலைவர் பெ. மணியரசன் தலைமையில், ஒசூரில் 07.08.2016 அன்று காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது.
கூட்டத்தின் தொடக்கத்தில், அண்மையில் காலமான தமிழ்த் தேசியப் பேரியக்க சென்னைத் தோழர் சாதிக்குல் ஜன்னா (எ) புதுமொழி, தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் ஐயா மு. அருணாச்சலம், நாகாலாந்து விடுதலை இயக்கத் தலைவர் ஐசக் சிசு, தமிழர் தன்மானப் பேரவை துணைப் பொதுச் செயலாளர் முனைவர் நா. காமராசு, பாலாற்றில் உயிரீகம் செய்த உழவர் சீனிவாசன், நெல்லை வழக்கறிஞர் சங்கத் தலைவர் – போராளி வழக்கறிஞர் முத்துராமலிங்கம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.
கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

1. “தமிழ்நாட்டின் இந்திய அரசு நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கே 90% வேலை – தமிழே அலுவல் மொழி” – திருச்சி தொடர் வண்டி கோட்ட அலுவலக முற்றுகைப் போராட்டம்!

2. புதிய கல்விக் கொள்கையைக் கைவிடுக!

3. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுக!

4. பாலாற்றில் ஆந்திரா கட்டியுள்ள நீர்த்தேக்கத்தை இடிக்க வேண்டும்!

5. இணயம் துறைமுகத் திட்டத்தை, மதிப்பீட்டு அறிக்கையைத் தாக்கல் செய்து – மக்கள் கருத்தை அறியாமல் செயல்படுத்தக் கூடாது!

6. தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை நடப்பாண்டிலேயே நிதி ஒதுக்கி செயலுக்குக் கொண்டு வர வேண்டும்!

7. வழக்குரைஞர்கள் மீதான இடை நீக்கத்தைக் கைவிட, வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பூட்டும் ஒழுங்குமுறை விதிகளைத் திரும்பப் பெற இந்திய – தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாட்டின் இந்திய அரசு நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கே 90% வேலை என்கிற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 2016 செப்டம்பர் 12 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமையில், திருச்சி தொடர்வண்டி கோட்ட அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்றும்,
இப்போராட்டத்தை இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எழுச்சி மிக்க போராட்டமாக நடத்தவும், அதற்கேற்ப சுவர் விளம்பரங்கள், ஒவ்வொரு பகுதிக்கும் பொருத்தமான துண்டறிக்கை பரப்புரை, கலந்துரையாடல்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி விரிவான பரப்புரை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.

Leave a Response