நேர்மை திறனிருந்தால் விவாதத்துக்கு வாருங்கள் – ஜெயமோகனுக்கு பகிரங்க விவாத அழைப்பு

விகடன் தடம் இதழில் வெளியான ஜெயமோகனின் நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்துகளுக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன. ஜெயமோகன் அரைவேக்காட்டுத்தனமாகப் பல கருத்துகளைச் சொல்லியிருக்கிறாராம். ஈழப்போராட்டம் சம்பந்தமாகவும் அவர் அப்படியே பேசியிருக்கிறார். அதற்கு கவிஞர் தமிழ்நதி எதிர்வினையாற்றியிருந்தார்.

அவர் தவிர நிறைய எழுத்தாளர்களும் இலக்கிய வாசகர்களும் ஜெயமோகனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இந்நிலையில், நஞ்சுண்டகாடு, விடமேறிய கனவு, அப்பால் ஒரு நிலம் என மூன்று நாவல்களை எழுதியவர். ஊடகவியலாளர். தன் நாவல்கள் மூலம் விடுதலைப் புலிகளையும் நேர்மையாக விமர்சனம் செய்தவர். இப்போது புலம்பெயர்ந்த தமிழர் என்ற அடையாளத்துடன் நெதர்லாந்தில் வசித்து வரும் குணாகவியழகன், ஜெயமோகனுக்கு பகிரங்க விவாத அழைப்பு விடுத்துள்ளார். அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இது குறித்து எழுதியிருப்பதாவது….

எழுத்தாளர் திரு.ஜெயமோகன் விகடன் தடம் இதழின் பேட்டியில் இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை இல்லை என கூறியிருக்கிறார். இந்த கருத்துத் தொடர்பில் ஒரு பகிரங்க விவாதத்திற்கு திரு.ஜெயமோகனை அழைக்கிறேன். அரசறிவியல் கோட்பாட்டு அடிப்படையிலும் நடப்பிலுள்ள இனப்படுகொலை தொடர்பான சர்வதேசச் சட்ட நியமங்களின் அடிப்படையிலும் இந்த விவாதத்தை நிகழ்த்த முடியும் என துணிகிறேன். தான் கூறிய கருத்தில் இப்போதும் அவருக்கு துணிபிருந்தால், விடய அறிவிருந்தால், தன் கருத்தில் இந்த கணம் வரையிலும் ஆட்சேபணையற்றிருந்தால் , நெஞ்சில் மீதமாய் நேர்மை திறனிருந்தால் இந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன்.
காத்திருப்புடன்… குணா கவியழகன்

என்று அழைப்பு விடுத்திருக்கிறார். ஜெயமோகன் என்ன செய்யப்போகிறார்?

Leave a Response