பெரும்பான்மை மலையாளி மனசாட்சியாக அம்பலப்படுகிறார் – ஜெயமோகனைத் தோலுரிக்கும் எதிர்வினை

விகடன் தடம் இதழில் வெளியான ஜெயமோகனின் நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்துகளுக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன. முகநூலில் அய்யனார்விஸ்வநாத் எழுதியுள்ள பதிவில்…

ஜெமோ – வின் நேர்காணலை வாசித்து முடித்தபின்பு எழுந்த முதல் எண்ணம், இதில் புதிதாக எதுவும் இல்லையே என்பதுதான். இதுவரைக்கும் அவர் எழுதிய/பேசிய அரசியல் கருத்துகளை ஒரே கட்டுரையாகத் தொகுத்து விட முடிவதுதான் இந் நேர்காணலின் சிறப்பு. கருத்தியல் ரீதியாக ஜெயமோகன் யார்? என்பதை சுருக்கமாக அறிந்து கொள்ள முடிகிறது. நெடுங்காலமாக ஜெமோ வின் நிலைப்பாட்டை கவனித்து வரும் சுகுணா திவாகரால் இந்தக் கேள்விகளை சரியாக முன் வைக்க முடிந்திருக்கிறது. வழக்கமாக நீளமான பேட்டிகளை வாசித்த பின்பு அந்த ஆளுமை மீது எழும் சிறு வியப்பு இதில் எழாவண்ணம் பார்த்துக் கொண்டிருப்பதும் சுகுணாவின் இன்னொரு சிறப்பு. எந்தக் கேள்வியைக் கேட்டால் சமூகவலைத் தளங்கள் பற்றிக் கொள்ளும் என்பது பேட்டியாளர்களுக்கும், எப்படிப் பதில் சொன்னால் அடுத்த பிரச்சினை வரும்வரை தம் பெயரே அடிபட்டுக் கொண்டிருக்கும் என்பது ஜெமோவிற்கும் நன்றாகத் தெரிந்திருப்பதால், இருவரும் விரித்த வலையில் விழாமல் நிதானமாக இப் பேட்டியை அணுகுவோம்.

1. குல தெய்வ வழிபாட்டிற்கும் இந்து மதத்திற்கும் தொடர்பு கிடையாது என்பது என் சிறு வாசிப்பில் அறிந்து கொண்டது. இந்து மதத்தின் மேலிருக்கும் அபிமானத்தால் ஜெமோ வே இக்கருத்தை உருவாக்க முயல்கிறார் என்பது என் எண்ணம். இல்லை குலதெய்வ வழிபாடும் இந்து மதத்தின் அங்கம்தான் ஆய்வுகள் சான்றுகள் இருக்கின்றன என்றால் அறியத் தாருங்கள். பரப்பிரும்ம ரூபிணி, செளந்தர்ய லஹரி என்கிற வார்த்தைகளையெல்லாம் லா.ச.ரா நாவல்களில் பார்த்ததோடு சரி. சுடலைமாடனுக்கு சிவன் விபூதி மந்திரித்து தந்ததை இன்று அறிந்தேன்.

2. இனப்படுகொலையை அரச வன்முறையாகத் திரிப்பது பல நாடுகளில் குற்றம் என்பதாக எம்டிஎம் மின் ட்விட் ஒன்றைப் பார்த்தேன். இந்தியாவில் என்ன நிலை எனத் தெரியவில்லை. ஈழ இனப்படுகொலையை அரசு கலகக்காரர்களை ஒடுக்கியதாய் சுருக்கிய பல மலையாளிகளை இங்கு பார்த்து வெறுத்திருக்கிறேன். தேசாபிமானமும் காரிய அடிமைத்தனமும் பெரும்பான்மையான மலையாளிகளின் இயல்பு. தன்னை மாநிலங்களைக் கடந்த படைப்பாளியாக கருதிக் கொள்பவர் பெரும்பான்மை மலையாளி மனசாட்சியாக இங்கு அம்பலப்படுகிறார்.

3. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறும் இந்திய சோட்டா அரசாங்கங்களுக்காக நான் நாவல் எழுதுவதா? என ஒரு படைப்பாளியாய் செருக்குறுபவர் அதே சோட்டா அரசாங்கங்கள் செய்யும் தனிப்பட்ட அராஜகங்களை எதிர்க்காமல் அரசாண்மை எனத் தஞ்சமடைவதை எப்படிப் புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை. சோட்டா அரசை எதிர்ப்பது இந்தியாவை எதிர்ப்பது ஆகாது என்பதை அறிந்திருப்பார்தானே?

4. சக எழுத்தாளர்களின் மீதான வெறுப்பு – குறிப்பாக பெண் எழுத்தாளர்களின் மீதான வெறுப்பு – விமர்சனம் என்கிற பெயரில் ஜெமோவிடமிருந்து தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருப்பது அறிந்ததுதான் என்றாலும் இப்போது சற்று இளகி லீனாவை கவிஞராக ஒத்துக் கொண்டிருக்கிறார் இது வரவேற்கத்தக்க மாற்றம். பெண் எழுத்தாளர்களுக்குள் இருக்கும் குழு அரசியலை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வெள்ளந்தியாக நம்புவோம். ஆனால் பெண்கள் எழுதவும் செய்வார்கள் என அவர் நம்ப ஆரம்பிப்பதே ஆரோக்கியமான மாற்றம்தானே. நேற்று கூட மகாஸ்வேததேவி படைப்புகளை பிரச்சார எழுத்து எனக் குறிப்பிட்டிருந்தார். ஏன் குட்டி ரேவதியும் சல்மாவும் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது? இவர்கள் எந்த வகையில் இப்போது வெளிநாடுகளுக்குப் பறந்து கொண்டிருக்கும் காமாசோமா டிவி /சினிமா நடிகர் நடிகைகளுக்கு இளைத்தவர்கள்?

5. தமிழ் நதியை வாஸந்தியோடு ஒப்பிட்டவர் இரண்டு முக்கியமான நாவல்களை எழுதிய குணாவின் பெயரை உச்சரிக்கக் கூட இல்லை. சம காலத்தில் வெளிவரும் எல்லா படைப்புகளையும் உடனுக்குடன் வாசித்து விடுவதாகவும், அதுகுறித்து எழுதுவதாகவும், அதனால் தனக்கு விருதுகளை நிர்ணயிக்க கூடிய சக்தி இருப்பதாகவும் நம்புபவர், இன்னொரு தரப்போடு உரையாடுவதை காந்தியிடமிருந்து பெற்றுக் கொண்டவர், இப்படிக் கண்மூடித்தனமாக எதிர் தரப்பை ஒதுக்கித் தள்ளுவதுதான் அவர் நம்பும் அறமா?

6. ஜெயமோகன் தன் புனைவெழுத்துகளுக்காக மட்டுமல்ல வெறுப்பரசியலுக்காகவும் வரலாற்றில் நினைவு கொள்ளப்படுவார்.

Leave a Response