இலங்கை அதிபர் பதவியிலிருந்து விலகியதோடு நாட்டைவிட்டும் தப்பொயோடிய கோத்தபய ராஜபக்சே தற்போது சிங்கப்பூரில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கோத்தபய மீது, சிங்கப்பூரில் உள்ள தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் குழு ஒன்று சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரலிடம் குற்ற புகார் மனு ஒன்றை அளித்து உள்ளது.
அதில், 2009 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரில் ஜெனீவா ஒப்பந்த விதிகளை மீறி கோத்தபயா செயல்பட்டு உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போரின்போது, அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்துள்ளார். சிங்கப்பூரில் இந்தக் குற்றங்களுக்கு ஒருவர் மீது வழக்கு தொடர முடியும் என 63 பக்க புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவானது அளித்துள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போரின்போது, சர்வதேச மனிதநேயச் சட்டம் மற்றும் சர்வதேச குற்றச் சட்டம் ஆகியவற்றின் விதிகளைக் கோத்தபயா மீறியுள்ளார். அவற்றில் கொலை, சித்ரவதை, மரண தண்டனை மற்றும் மனிதநேயமற்ற முறையில் நடந்து கொள்ளுதல், பாலியல் வன்கொடுமை மற்றும் பிற வடிவங்களிலான பாலியல் அத்துமீறல், சுதந்திரம் பறிபோதல், உடல் மற்றும் மனரீதியான கடுமையான துன்புறுத்தல் மற்றும் பட்டினியாக கிடக்க செய்தல் உள்ளிட்ட குற்றங்கள் நடந்துள்ளன என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே அவர் செய்துள்ள இந்தக் குற்றங்களுக்காக அவரைக் கைது செய்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இம்மனுவை சிங்கப்பூர் அரசு ஏற்றுக்கொண்டாலும், இந்த விடயத்தில் அடுத்த கட்டம் குறித்து பதில் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
ஆனாலும் அம்மனு நிராகரிக்கப்படாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால் கோத்தபயவைக் கைது செய்யும் நடவடிக்கையை எதிர்பார்க்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.