இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலையே என்பதை அங்கீகரித்துக் கனேடியப் பாராளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இலங்கை அரசு மிகக் கொடூரமான யுத்தத்தைத் தொடுத்துத் தமிழினப் படுகொலையை நிகழ்த்தியே 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அப்போதிருந்தே தமிழினம் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு உலக நாடுகளினதும் ஐக்கிய நாடுகள் சபையினதும் கதவுகளைத் தட்டிவந்த நிலையில் உலகின் முதல் நாடாகக் கனடா இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது.
இது தமிழ்மக்களின் நீதிதேடும் நெடும் பயணத்தின் ஒரு மைல்கல் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி கனேடியப் பாராளுமன்றில் இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலைதான் என்பதை ஏற்றுத் தீர்மானம் நிறைவேற்றியமை தொடர்பாகப் பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் நடந்த யுத்தம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமே என்று அரச தரப்புப் பரப்புரை செய்து வருகிறது. இது ஓர் போர்க்குற்றமே என்று அரசாங்கத்தைக் காப்பாற்றும் முகமாகச் சில தரப்புகள் கூறிவருகின்றன.
ஆனால், நிகழ்ந்தது தமிழினப் படுகொலையேயென தமிழினம் நீதிகேட்டுத் தசாப்த காலத்துக்கும் மேலாகப் போராடி வருகிறது. இந்நிலையிலேயே அவர்களது போராட்டத்துக்குக் கிடைத்த ஒருபெரும் வெற்றியாகக் கனேடியப் பாராளுமன்றத்தின் தீர்மானம் அமைந்துள்ளது.
கனேடியப் பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி “இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை ஏற்று ஆண்டுதோறும் மே-18 ஆம் திகதியைத் தமிழர் இன்படுகொலை நினைவேந்தல் நாளாக அங்கீகரிக்க வேண்டும்” என்ற பிரேரணையை முன்வைத்தபோது எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழினம் தன் இலக்கை நோக்கி முன்னேறிச்செல்ல கனேடியப் பாராளுமன்றின் இத்தீர்மானம் ஒரு கொழுகொம்பாக அமைந்துள்ளது.
கனேடியப் பாராளுமன்றில் இப்பிரேரணையைக் கொண்டு வந்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரிக்கும், ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதன் பின்னால் நின்று உழைத்த புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துக்கும் தமிழ்கூறும் நல்லுலகு தலைசாய்த்துத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.