மதுவின் தீமைகள் குறித்து நாள்தோறும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உலகம் வேறெங்கோ போய்க்கொண்டிருக்கிறது. மதுவகைகளில் ஒன்று பீர். பீர் குடித்தால் காசு கரையும் ஆனால் பீர் வகைகளை ருசிபார்த்து விமர்சித்து, தொகுப்பு கட்டுரை எழுதினால் ஆண்டுக்கு 64,650 டாலர் சம்பளம் தருகின்றார்களாம்.அமெரிக்காவில் இந்த ஆச்சரியம் நடக்கவிருக்கிறது. இந்த வேலைக்காக இலட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் நகரில் தான் இந்த அதிசய வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தேசிய அருங்காட்சியகம் சமீபத்தில் வேலைக்கான ஒரு பணியிடத்தை இணையதளத்தில் அறிவித்துள்ளது. அது என்னவென்றால், பீர் தயாரிப்பு மற்றும் உணவுப் பழக்கங்கள் போன்ற தகவல்களை நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மதுபான ஆலைகளில் தயாராகும் பீர்வகைகளை ருசித்து பார்த்து ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும் மூன்றாண்டு குத்தகையில் இந்த பணி நடைபெறும்.
இதற்கு ஆண்டு சம்பளமாக 64,650 டாலர்கள். இது இந்திய மதிப்பில் சுமார் 43 லட்சம் ரூபாய். இந்த வேலைக்கு பல நாடுகளிலிருந்து பல லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதிவரை இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம். மது குடிக்கச் சம்பளம் வாங்க போகிறவர்கள் எவரெவர் என்பதைப் பார்க்க உலகமே ஆவலாக இருக்கிறது.