தமிழர்களின் நடுகல் மரபை அழிக்க சிங்களர்கள் சதி – விடுதலைச்சிறுத்தைகள் கண்டனம்

தமிழீழப்போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூறும் வண்ணம், ஆண்டுதோறும்  கார்த்திகை மாதம்  27 ஆம் நாள்  மாவீரர்நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாளில் அல்லாமல்  வேறொரு தினத்தில் கொண்டாடப்படவேண்டுமென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

டெலோ  கட்சியின் 33ஆவது அஞ்சலிக்கூட்டம்,  அதன்  தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் ஜூலை 27ஆம் தேதி  நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தமிழீழ மாவீரர் நாள் – கார்த்திகை 27இனை இல்லாமல் செய்து அதற்குப் பதிலாக, பிறிதொரு நாளைத் தேர்ந்தெடுத்து அன்றைய நாள் ரெலோ, ஈபிஆர்எல்எவ், ஈபிடிபி போன்ற அமைப்புக்களில் மரணித்த உறுப்பினர்களையும் நினைவுகூரவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

மாவை சேனாதிராசாவின் இப் பேச்சுக்கு உலகெங்கும் உள்ள  தமிழ் மக்கள் தமது கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வன்னிஅரசும் தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அவருடைய பதிவில்….

நடுகல் மரபை அழிக்க சதி!

விடுதலைப்புலிகள் இல்லை என்று தெரிந்ததும் ஆளாளுக்கு கதைக்க ஆரம்பித்துவிட்டாரகள். விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்று சிலர் அறிக்கை தர ஆரம்பித்தார்கள். தமிழகத்தில் கூட பிரபாகரனுக்கு பதில் நான் தான் தலைவர், அவர் தான் என்னை கட்சியே ஆரம்பிக்க சொன்னார் என்று ஏமாற்று வேலைகளை செய்து கொண்டு வரத்தான் செய்கிறார்கள்.

போர் முடிவுக்கு பின் தமிழரசு கட்சியைச் சார்நத சம்பந்தன், ஈழம் என்கிற வார்த்தையையே கைவிட்டுவிட்டார். மகிந்த ராசபக்சவிடம் சரணாகதி அடைய ஆரம்பித்தனர். அதில் முக்கியமானவர் மாவை சேனாதிராசா. இலங்கை அதிபர் மைத்ரி சிறிசேனாவின் செய்தித்தொடர்பாளர் போல இலங்கையில் செயல்பட்டு வருகிறார். அப்படிபட்டவர் மாவீரர்கள் நாளை மாற்ற வேண்டும் என்று பேசியுள்ளார். டெலோ அமைப்பின் 33வது செயற்குழு கூட்டத்தில் மாவை பேசும்போது, “இனி மாவீரர்கள் நாளான கார்த்திகை 27ஐ மாற்றி, டெலோ, ஈபிஆர்எல்எப் போராளிகளை நினைவு கூறும் வகையில், பொதுவான நாளாக மாற்ற வேண்டும்” என்று பேசியுள்ளார்.

அதாவது, சிங்கள ராணுவத்துக்கு ஒரே அச்சுறுத்தலாக இருப்பது இந்த மாவீரர் நாள் மட்டுமே! அந்த நாளில் தான் சிங்கள ராணுவமே பயந்து ஏதும் நடந்து விடக்கூடாது என்று கூடுதல் பாதுகாப்போடு திரிவார்கள். ஆகவே, அந்த நாளே இல்லாமல் போய்விட்டால் சிங்கள அரசின் ஆசையும் நிறைவேறிவிடும். அதைத்தான் மாவை மூலமாக சிங்கள அரசு செயல்படுத்த முனைகிறது. தமிழீழ விடுதலைக்காக லட்சக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக வீரச்சாவடைந்தார்கள். அன்னை பூபதி உள்ளிட்ட பொது மக்கள் சிங்கள கொடுங்கோண்மைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து தமது தாய் மண்ணுக்காக வீரச்சாவடைந்தார்கள். அப்படி இன்னமும் நடுகல்லாய் தமிழினத்தின் அடையாளமாய் இருப்பவர்களை தான் மேதகு பிரபாகரன் அவர்கள் மாவீரர்களாக வணங்கினார். அந்த மாவீரர்களில் விடுதலைப்புலிகள் மட்டுமல்ல, டெலோ உள்ளிட்ட போராளிகளையும் சேர்த்தார் மேதகு பிரபாகரன் அவர்கள். இதை செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம் போன்றவர்கள் அன்று தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களோடு இணைந்து பணியாற்றிய போதே கதைத்தது தான்.

ஆக, தேச விடுதலைக்காக வீரச்சாவடைந்த அத்தனை போராளிகளுக்குமான மாவீரர்கள் தினத்தை மாற்றுவது என்பது நமது அடையாளத்தை சிதைப்பதாகும். ஏற்கனவே, மாவீரர் துயிலும் இல்லங்களை சிதைத்த சிங்களம் இப்போது, தமிழர்களின் நடுகல் மரபையும் சிதைக்க முயற்சிப்பது அந்த மாவீரர்களின் தியாகத்தை சிதைப்பதாகும்.

கால் நூற்றாண்டுக்கு மேலான ஆயுதப்போராட்டத்தின் வரலாற்றுச்சுவடையே அழித்து, அடுத்த தலைமுறைக்கு நமது போராட்டத்தை, தியாகத்தை கொண்டு செல்லாமல் தடுக்கும் சதி தான். அப்படிப்பட்ட கேவலமான செயலைத்தான் மாவை போன்றவர்கள் செய்து வருகிறார்கள். வரலாறு இவர்களை ஒரு போதும் மன்னிக்காது. சிங்கள ஒடுக்குமுறைக்கெதிராக அடுத்த தலைமுறை இன்னும் கூடுதலாக போராட வருவார்கள். அப்போது, விடுதலைப்புலிகளின் போராட்டமும் தியாகமும் உலகமே போற்றும். அதுவரை இந்த மாதிரியான துரோகிகளை காலம் டக்ளஸ், கருணா போன்றோரின் கணக்கில் வைத்துக்கொள்ளும்!

என்று சொல்லியிருக்கிறார்.

Leave a Response