திருப்பூர் தொகுதி அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, 02.8.16 மக்களவையில் ரயில்வே கன்வென்ஷன் கமிட்டி அறிக்கை மீதான அரசு தீர்மானம் குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார். அவர் பேசியதிலிருந்து….
ரயில்வே கன்வென்ஷன் கமிட்டியின் அறிக்கை மீதான விவாதத்தில் பேச எனக்கு வாய்ப்பளித்த இதயதெய்வம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு என் நன்றியறிதலை தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அவர்கள் நடப்பாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அறிமுகம் செய்து பேசிய போது, சவால்கள் மிகுந்த கடும் சோதனையான காலகட்டத்தை சந்தித்து வருவதாகச் சொன்னார். ஆமாம் நாடு முழுமைக்கும் அனைத்து பிரிவினருக்குமான தேவைகளை நிறைவேற்றுவது ரயில்வே அமைச்சருக்கு சவாலான அலுவல் என்றே சொல்லவேண்டும்.
மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றத் தவறிய பட்ஜெட் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தெரிவித்திருந்தார். எந்த புதிய ரயில் வண்டிகள் பற்றிய அறிவிப்பு இன்றி, புதிய ரயில் வழித்தடங்கள் இன்றி, புதிய திட்டங்கள் குறிப்பாக தமிழ்நாட்டிற்கென எந்த புதிய திட்டமும் இன்றி இந்த பட்ஜெட் ஏமாற்றம் தந்தது.
முக்கிய ரயில் நிலையங்களை சிசிடிவி கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம். ரயில் நிலையங்கள் உள்ள போலீசாருக்கு இந்த கண்காணிப்பு கேமராக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் உதவும். ரயில் மித்ரா சேவா என்ற திட்டத்தின் கிழ் பேட்டரியால் இயங்கும் கார்கள், போர்ட்டர் சேவைகள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குவதற்கும், நடப்பாண்டு முடிவடைவதற்குள் 17 ஆயிரம் பையோ-டாய்லெட்டுகள், 475 ரயில் நிலையங்களில் கூடுதல் கழிப்பறை வசதிகள், முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது ஆகிய திட்டங்களுக்கு அதிக நிதி தேவைப்படும்.
ரயில்வே அமைச்சகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்ட விருப்பம் இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்ததை எட்டுவது குறித்து பரிசீலிக்கவும், அதன் விரைவான அமலாக்கத்துக்கும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து ரயில்வே அமைச்சகம் செயல்பட முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சென்னையின் புறநகர்ப்பகுதி ரயில்வே கட்டமைப்பை பலப்படுத்தி மேம்படுத்துவதில் தமிழ்நாட்டுடன் கூட்டாளியாக ரயில்வே அமைச்சகம் இணைவதோடு ஒரு நவீன நிதி நடைமுறையை பின்பற்ற உள்ளது என்பதை அறிவதில் மகிழ்ச்சி. நிலத்தை மாநில அரசு கொடுக்கும் என்பதால் இந்த சிறப்புத் திட்டத்துக்கான மாநில அரசின் பங்கு நிதியாக இந்த நிலத்தின் சந்தை மதிப்பை ஏற்கவேண்டும்.
இரண்டாம் நிலை நகரங்களாக மிக வேகமாக வளர்ந்து வரும் கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு, சேலம், வேலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகியவற்றில் ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிக அக்கறை செலுத்தவேண்டியது அவசியம்.
திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை வரை சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு வழியாக புதிய ரயில் பாதையை அமைக்கவேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை வலியுறுத்த விரும்புகிறேன். இந்த புதிய ரயில் வழித்தடத்தை விரைவில் அமல்படுத்துமாறு மாண்புமிகு ரயில்வே அமைச்சரிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
திருப்பூர் ரயில் நிலையத்தைப் பொறுத்த அளவில் பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அவற்றை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பயணிகள் ரயில் வண்டிகள் திருப்பூர் ரயில் நிலையத்தில் வழக்கமாக இரண்டு நிமிடங்களுக்கு மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் பார்சல் சேவைகளை திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்க முடியவில்லை. துணிகள் மற்றும் பின்னலாடைத் தொழிலில் திருப்பூர் முக்கிய கேந்திரமாகும். எனவே திருப்பூர் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் அனைத்து ரயில்வண்டிகளும் குறைந்தது ஐந்து நிமிடங்களாவது நின்று செல்லவேண்டும். அப்படிச் செய்தால் பார்சல் சேவைகளை திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வழங்க முடியும்.
திருப்பூர்-பாலக்காடு இடையேயும், திருப்பூர்-திருச்சி இடையே கரூர் வழியாகவும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஷட்டில் சேவைகளை இயக்கவேண்டும் என்று மாண்புமிகு ரயில்வே அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.