பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் உட்பட பலர் நடிக்கும் ரெமோ படத்தின் படப்பிடிப்பு, நேற்றுடன் (02.08.2016) நிறைவடைந்தது.
இதுவரை தமிழ்த்திரையுலகில் இல்லாத வகையில், படப்பிடிப்பின் கடைசிநாளை வெகு விமரிசையாகக் கொண்டாடியிருக்கின்றனர்.
படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள், தொழிலாளர்கள் ஆகிய எல்லோரையும் ஒருங்கிணைத்து நன்றி அறிவிப்பு விழா கொண்டாடப்பட்டிருக்கிறது.
சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், இயக்குநர் பாக்கியராஜ்கண்ணன், ஒளிப்பதிவாளர் பிசி.ஸ்ரீராம், கலைஇயக்குநர் முத்துராஜ், உடைவடிவமைப்பாளர் அனு உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில். ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுக்கு ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டதாம்.
அதன்பின் வடை பாயசத்துடன் தலைவாழை இலை விருந்து நடைபெற்றதாம்.
படத்தில் பணியாற்றிய மூத்த தொழிலாளர் ஒருவர் கூறும்போது, இருபதாண்டுகளுக்கு மேலாக இந்தத்துறையில் வேலை செய்கிறேன், இது போன்று எங்கும் நடந்ததில்லை என்று மனமாரப் புகழ்ந்து பேசினார்.
படம் தொடங்கியதிலிருந்து, எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிவிப்பது என்கிற முடிவின்படி, படத்தின் குரல்பதிவுக்கு பூசை போட்டு அறிவித்தனர்.
அதன்பின் அக்டோபர் ஏழாம்தேதி படம் வெளியாகும் என்பதை ஜூலை 14 ஆம் தேதியே அறிவித்தார்கள்.
அதேபோல படத்தின் வியாபாரத்தை ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் தொடங்குகிறோம் என்பதையும் முன்கூட்டியே அறிவித்தனர்.
இப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மையோடு செயல்படும் ஹாலிவுட்டை பின்பற்றி இங்கும் அதேபோல் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார், இது நல்ல விசயம் என்று திரைத்துறையில் பரவலாகப் பேசப்படுகிறது.