‘ரஜினி முருகன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ராசியான ஜோடியாக மாறிய சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மீண்டும் ‘ரெமோ’ என்கிற படத்துக்காக இணைந்து நடிக்கிறார்கள் இல்லையா..? பாக்யராஜ் கண்ணன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஹைலைட்டான செய்தியே சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்துள்ளார் என்பதுதான்.
நர்ஸ் வேடத்தில் அழகிய பெண்ணாக சிவகார்த்திகேயனை பார்க்கும்போது ‘அட’ என்கிற ஆச்சர்யம் எழாமல் இல்லை. இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நடித்துள்ளார்.. ஏற்கனவே அவ்வை சண்முகி மற்றும் வரலாறு ஆகிய படங்களில் ஹீரோக்களை பெண்கலாகாவும், பெண்கள் போலவும் மாற்றியவர் அவர். ஆக சிவகார்த்திகேயனுக்கும் அவர் நிறைய டிப்ஸ் கொடுத்தாராம். இந்த தகவலை இன்று நடைபெற்ற ‘முடிஞ்சா இவன புடி’ இசைவெளியீட்டு விழாவில் பகிர்ந்துகொண்டார் சிவகார்த்திகேயன்.
“ரெமோ படத்தின் படபிடிப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்தார். ரெமோ படத்தில் நான் பெண் வேடத்தில் நடிக்கையில் அது எனக்கும் பெரிதும் உதவியது. வில்லன் படத்தில் அஜித் அவர்கள் கடைபிடித்த சில விஷயங்களை எனக்கு கற்று கொடுத்து ரெமோ படத்தில் வரும் பெண் வேடத்தை மேலும் மெருகேற்றினார். டப்பிங்கில் நான் பெண் வேடத்துக்கு பேசும் போது இவ்வாறு பேச வேண்டும் என சில விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தார்” என சிவகார்த்திகேயன் கூறினார்..