
திரைப்படங்களின் வளர்ச்சி காரணமாக நாடகங்கள் அழிவைச் சந்திப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. இப்போது அக்குற்றச்சாட்டைப் பொய்யாக்கும் நிகழ்வொன்று நடக்கவிருக்கிறது, பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் நாடகங்களை நடத்தவிருக்கிறது.
தமிழ்த் திரையுலகில் பல படங்களை தயாரித்தும் விநியோகம் செய்தும் வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், மறைந்த இராம.நாராயணனால் தொடஙகப்பட்ட அந்நிறுவனம், அவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் முரளியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அந்நிறுவனம் இப்போது தேனாண்டாள் என்டர்டெய்ன்மென்ட் எனும் பெயரில் கச்சேரி மற்றும் நாடகங்க ளையும் தயாரித்து வருகிறது.
இந்நிறுவனம் சார்பாக தற்போது தயாராகி வரும் இந்தி நாடகம் ‘மேரா ஓ மத்லப் நஹி தா’ (Mera Woh Mathlab Nahi Tha). ராகேஷ் ரெட்டி இயக்கத்தில் அனுபம் கெர், நீனா குப்தா ஆகியோர் இதில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்த நாடகத்தின் முதல் பார்வையை இயக்குநர் மணிரத்னம் வெளியிட தயாரிப்பாளர் முரளியின் துணைவியார் ஹேமா ருக்மணி பெற்றுகொண்டார்.
இந்நாடகம் வரும் செப்டம்பர் 18-ம் தேதி மாலை 6.30 மணியளவில் சென்னை மியூசிக் அகாடமியில் அரங்கேற்றப்படவுள்ளது.
இதன்மூலம் கிடைக்கும் வசூலை ஏழைக் குழந்தைகளின் கல்விச்செலவுக்காக பயன்படுத்த தேனாண்டாள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தி நாடகத்தைத் தொடர்ந்து தமிழில் நாடகங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் இப்படி இறங்கியிருப்பதால் நாடகக் கலைக்கு புத்துயிர் கிடைக்கும் என்பதோடு ஏழைக்குழந்தைகளுக்குக் கல்வி உதவியும் கிடைக்கவிருக்கிறது.
ஒரே நேரத்தில் இரண்டு நற்செயல்களைச் செய்யத் திட்டமிட்டிருக்கும் தயாரிப்பாளர் ஹேமாருக்மணிக்கும் அவருக்கு ஊக்கமளிக்கும் முரளிக்கும் வாழ்த்துகள்.


