
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் சீமான் பரப்புரை செய்தார்.
கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் அவர் பேசியதாவது….
தமிழ்நாட்டில் மாற்றம் மாற்றம் எனக்கூறும் அரசியல் கட்சிகள் இலவசம் என்கிற கவர்ச்சித் திட்டங்களை அறிவிக்கின்றனர்.இலவசத் திட்டங்களை அறிவிக்கும் கட்சியினர் ஏன், சாராயத்தை ஒழிப்பேன் எனக் கூறுவதில்லை.நிறைந்த போதையில் தவறுகள் அதிகரித்துள்ளன.6 வயது குழந்தை முதல் 60 வயது அம்மா வரைக்கும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இலவசங்களைக் கொடுத்து மக்களை வேலை செய்யவிடாமல் தடுத்துவிட்டீர்கள்.வடஇந்தியாவில் இருந்து வேலைக்கு ஆட்களைக் கொண்டு வந்தீர்கள்.எஸ்ஐஆர் மூலம் ஒன்றரைக்கோடி வட இந்தியர்களுக்கு வாக்குகளை வாங்கிக் கொடுத்துள்ளீர்கள்.என் நாட்டில் அரசியல் அதிகாரத்தை வடஇந்தியர்கள் முடிவு செய்வார்கள்.ஏற்கெனவே நாம் மொழி,வரலாறு,வழிபாடு,நிலத்தை விட்டு வெளியேறி விட்டோம்.என் நிலத்தில் வடஇந்தியர்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கினால்,நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வழி இல்லை.
யார் ஒருவர் இந்த மண்ணை பேரன்பு கொண்டு காதலிக்கிறாரோ அவரால்தான் இதைச் சரி செய்யமுடியும். அதனால்தான், எத்தனை முறை தோற்றாலும் அவர்களோடு கூட்டணி வைக்காமல் தனித்து தேர்தலைச் சந்திக்கிறோம்.
மலையையும்,மண் வளத்தையும் கடத்துகிறார்கள்.மலை வளங்களைச் சுரண்டி,மழை வளங்களை அழிக்கும் இந்தக் கட்சிகளை புறம்தள்ளவேண்டும்.நான் போதிக்கும்போது புரியாது.பாதிக்கும்போதுதான் புரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.


