
குடும்பப் பிரச்னைகளை அலசும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி பலவிதமான விமரிசனங்களுக்கு மத்தியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சிலமாதங்களுக்கு முன்புவரை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.
அவருடைய ‘என்னம்மா இப்டி பண்றீங்களேமா’ என்கிற வாக்கியம் முதலில் விஜய் டிவியில் கிண்டல் செய்யப்பட்டது. அதன்பிறகு அது சினிமா உள்பட பல இடங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.பிறகு கடந்த ஜூன் மாதம் இந்த நிகழ்ச்சியிலிருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் விலகினார்.
இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது: சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி எனக்கு நல்ல அனுபவம். நிறைய பேரின் வாழ்க்கையில் ஒரு சின்ன மாற்றத்தை, நல்ல மாற்றத்தை உண்டாக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு நான் ஜீ தமிழுக்கு நன்றி சொல்வேன். ஏன் இந்த மாற்றம் என்று பலரும் கேட்கிறார்கள். படங்களில் பிஸியாகிவிட்டேன். குடும்பப் பொறுப்புகள் உள்ளன. அதனால் விலகவேண்டிய சூழல் வந்தது என்றார்.
லட்சுமி ராமகிருஷ்ணனுக்குப் பதிலாக நடிகை சுதா சந்திரன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
தற்போது சுதா சந்திரனுக்குப் பதிலாக லட்சுமி ராமகிருஷ்ணன், சொல்வதெல்லாம் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 4 முதல் இந்த நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாகிறது. திங்கள் – வெள்ளி. 8 மணிக்கு.


