அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்விக்கு வரவேற்பு – என்ன காரணம்?

சி.பி.எஸ்சி., மெட்ரிக் போன்ற தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம், பள்ளிக் கட்டிட நிதி, அறக்கட்டளை நிதி என தனித்தனியாக வசூலிக்கின்றனர். இதனால் அரசுப்பள்ளியில் உள்ள ஆங்கிலவழிக் கல்விக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
 பிரி–கேஜி வகுப்புகளுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம், எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு வருடத்திற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. வகுப்புகள் அதிகரிக்கும் போது கட்டணமும் ரூ.10 ஆயிரம் அதிகரித்து விடுகிறது. இதனால் நடுத்தர குடும்பத்திலிருந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்குக் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. கூடுதல் வகுப்புகளுக்காக தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து பள்ளிக்கும், பயிற்சியாளருக்கும் என கட்டணங்களை தனித்தனியாக வசூலிக்கின்றனர்.
மேலும் பள்ளியில் எந்த ஒரு நிகழ்ச்சி, விழா, சுற்றுலா, அறிவியல் கண்காட்சி, போட்டிகள் நடந்தால் அதற்குத் தனியாகக் கட்டணம் என வசூல் மழையில் தனியார் பள்ளி நிறுவனங்கள் இயங்குகின்றன.
தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தியதற்கு ரசீதுகள் எதுவும் தரப்படுவதில்லை. வசதி படைத்தவர்கள்  கேட்கும் கட்டணத்தைச் செலுத்தி விடுகின்றனர். அவர்கள் தாங்கள் அலுவலகத்திலிருந்து வரும் வரை குழந்தைகளை பள்ளியிலேயே பராமரிப்பதற்குத் தனியாகக் கட்டணம் செலுத்துகின்றனர்.
ஆனால் நடுத்தர மக்களால் தனியார் பள்ளிகளில் கேட்கும் கட்டணத்தை செலுத்த முடியாமல் தற்போது அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி முறை தொடங்கப்பட்டுள்ளதால் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவர்கள் எப்படியாவது தங்கள் குழந்தைகளை ஆங்கிலவழிக் கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.
கோவை மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ்.குளம் வட்டாரத்திற்கு உட்பட்ட சரவணம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 3–ம் வகுப்பு வரை ஆங்கிலவழிக் கல்வி உள்ளது. இங்கு தொடக்கத்தில் 44 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தற்போது 68 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் கலாமணி கூறியதாவது, சரவணம்பட்டி பகுதியில் தனியார் இண்டர்நேசனல், சி.பி.எஸ்.சி., மெட்ரிக் பள்ளிகள் அதிகம் உள்ளன. தனியார் பள்ளிகளைத் தாண்டி அரசுப்பள்ளிகளில் உள்ள ஆங்கிலவழிக் கல்வி முறைக்கு அதிக மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

இதற்குக் காரணம் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்குக் கூட வசூலிப்பது இல்லை. மேலும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், நோட்டு, சீருடை ஆகியவை வழங்கப்படுகிறது. இது அனைத்து மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இதே போன்று சரவணம்பட்டி ஷாஜஹான் நகர் அரசுப்பள்ளியில் தற்போது 115 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதே போன்று காளப்பட்டி, விளாங்குறிச்சி, சிவானந்தபுரம், கோவில்பாளையம் மேலும் எஸ்.எஸ்.குளம் வட்டாரத்திற்குட்பட்ட அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழில் கல்விக்கு பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்று சொல்கிறார்.

Leave a Response