மும்பை மேயர் பதவி எதிர்க்கட்சிக்கா? – பாஜக அச்சம்

அண்மையில் நடந்த மும்பை மாநகராட்சித் தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணிக் கட்சிகளான பாஜகவும் சிவசேனாவும் இணைந்து போட்டியிட்டன.

இதை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியும் ராஜ்தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் களமிறங்கின. காங்கிரசுக் கட்சி, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. தாக்கரே சகோதரர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிணைந்த நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை ஈட்டவில்லை.

பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும், பாஜகவை சேர்ந்தவர் மேயர் ஆவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மும்பையில் பாஜக அணியில் உள்லா ஷிண்டே சிவசேனா 29 இடங்களில்தான் வென்றுள்ளது. ஆனால் உத்தவ் சிவசேனா 65 இடங்களில் வென்றுள்ளது.

இந்நிலையில், கடவுள் விரும்பினால் தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரே மும்பையில் மேயராக வருவார் என்று உத்தவ் தாக்கரே நேற்று கூறியிருந்தார். எனவே, சிவசேனா கவுன்சிலர்களை இழுத்து மேயர் பதவியைக் கைப்பற்ற உத்தவ் திட்டமிட்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மும்பையில் மொத்த வட்டங்களின் எண்ணிக்கை 227. இதில் பாஜக 89 இடங்களிலும் ஷிண்டே சிவசேனா 29 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியின் பலம் 118 ஆகும். அதாவது பெரும்பான்மை பலத்தை விடவும் 4 மட்டுமே அதிகம். இதில் சில உறுப்பினர்கள் விலகினாலும், பாஜகவின் மேயர் கனவு பலிக்காது.

அதேநேரத்தில் உத்தவ் சிவசேனா 29, காங்கிரசு 24, எம்என்எஸ் 6 இடங்களைப் பிடித்தன. ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 8 இடங்களைப் பிடித்தது. இவர்கள் உட்பட எதிர்க்கட்சியினர் அல்லது பாஜகவுக்கு எதிரணியில் களமிறங்கி வெற்றி பெற்றவர்களை இழுத்தால் பாஜகவை உதறிவிட்டு ஷிண்டே எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மேயர் பதவியைக் கைப்பற்றலாம்.

இந்தநிலையில்தான் தன் கட்சி உறுப்பினர்கள் வேறு பக்கம் சாயாமல் இருக்கவும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் ஷிண்டே தனது கட்சியின் வெற்றிபெற்ற உறுப்பினர்களை பாந்திராவில் உள்ள 5 நட்சத்திர விடுதியில் தங்கவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிகஇடங்களில் வெற்றி பெற்ற பாஜக மேயர் பதவியைப் பிடிக்க முனைப்பு காட்டும் நிலையில், தங்கள் கட்சிக்கு மேயர் பதவி வேண்டும் என்று நெருக்கடி தரும் வகையிலும், கட்சி மாறாமல் தடுக்கும் நடவடிக்கையாகவும் இவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என்று மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இன்னொரு பக்கம்,பிரிந்திருக்கும் சிவசேனா கட்சிக்காரர்கள் ஒருங்கிணைந்தால் மும்பை மாநகராட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பு இருக்கிறது.அப்படி நடந்துவிடுமோ என்கிற அச்சத்தில் பாஜக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Response